தமிழ் இளைஞனை அடித்து கொலை செய்த இரு இராணுவத்தினருக்கு மரண தண்டனை..

ஆசிரியர் - Editor I
தமிழ் இளைஞனை அடித்து கொலை செய்த இரு இராணுவத்தினருக்கு மரண தண்டனை..

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை சட்ட முரணாக கைது செய்து அந்நபரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ கட்டளை தளபதி மற்றும் இராணுவ சிப்பாய் ஆகிய இருவருக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் குறித்த வழக்கில் முதலாம் எதிரியான இராணுவ அதிகாரி ஒருவர் நிரபராதியாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் 09.09.1998 ஆம் ஆண்டு யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த அன்ரன் குணசேகரம் என்ற இளைஞர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் இரண்டு நாட்களில் சடலமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டார்.

இது தொடர்பில் 51ஆவது முகாம் தளபதி முதலாம் எதிரியாகவும், யாழ்.512ஆம் படைப்பிரிவின் கட்டளை தளபதி இரண்டாம் எதிரியாகவும், திருநெல்வேலி இராணுவ முகாம் இராணுவ அதிகாரி மூன்றாம் எதிரியாகவும் பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இவ் வழக்கில் பல சாட்சியங்களது சாட்சியங்களையும், எதிரிதரப்பு சட்டத்தரணியினது வாதங்களை பரிசீலித்த மன்றானது இன்றைய தினம் இவ் வழக்கின் தீர்ப்புக்காக திகதியிட்டிருந்தது. 

இதன்படி இன்றைய தினம் காலை பதினொரு மணியளவில் நீதிபதி தனது தீர்ப்பினை திறந்த மன்றில் அறிவித்திருந்தார். அத்துடன் நீதிபதி தனது தீர்பில் இலங்கை உயர் நீதிமன்றம் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாகவும், சித்திரவதை தொடர்பான வழக்குகளிலும் வழங்கிய தீர்ப்புக்களையும், ஜ.நா.யுத்த குற்ற நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்களையும் மேற்கோள்காட்டி தனது தண்டனை தீர்ப்பை வழங்கியிருந்தார்.

இவ் வழக்கில் இவ் வழக்கின் முதலாம் எதிரியான 51ஆவது படைத் தளபதி அச்சுவேலி முகாமை சேர்ந்தவர். அவர் குறித்த இளைஞனை கைது செய்தமை, தடுத்து வைத்தமை என்பனவற்றுடன் மாத்திரமே தொடர்புபட்டுள்ளதுடன் அவர் சித்திரவதை புரிந்தமை, கொலை செய்தமை என்பனவற்றுடன் தொடர்புபட்டார் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லை.

எனவே இவ் வழக்கிலிருந்து இவ் இராணுவ அதிகாரி விடுதலை செய்யப்படுகின்றார். 

மற்றும் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் ஆதாரங்களூடாக பார்க்கின்ற போது இரண்டாம் எதிரியான இராணுவ கட்டளை தளபதி, மற்றும் திருநெல்வேலி இராணுவ முகாம் அதிகாரி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டானது நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படுகின்றது.

எனவே குறித்த வழக்கில் குற்றவாளிகளாக நிருபிக்ப்ப்பட்ட 512ஆம் படை பிரிவின் கட்டளை தளபதி மற்றும் திருநெல்வேலி இராணுவ அதிகாரி ஆகிய இருவருக்கும் ஜனாதிபதி விரும்பும் நேரத்தில் விரும்பும் இடத்தில் கழுத்தில் சுருக்கு கயிறிட்டு உடலில் இருந்து உயிர் பிரியும் வரை துக்கிலிட்டு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு ஆணை பிறப்பித்தார்.

குறித்த மரண தண்டனை தீர்ப்பானது வாசிக்கப்படும் போது நீதிமன்றின் அனைத்து விளக்குகளும், அணைக்கப்பட்டு தீர்ப்பு எழுதப்பட்ட பேனா முறித்து எறியப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் சில நிமிடம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு