இலங்கையின் அசமந்தம் - நண்டு இறக்குமதியை நிறுத்திய அமெரிக்க ; வடக்கில் 07 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளமையால் , வடக்கில் சுமார் 7 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் இழக்கப்படும் அபாயம் காணப்படுகிறது.
அமெரிக்க அரசாங்கம் கடல் பாலூட்டிகளை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் பாலூட்டி இனங்களை தமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளிடமிருந்து பாலூட்டிகளை பாதுகாக்கும் சான்றிதழ்களை பெற்று வருகிறது.
இதன் அடிப்படையில் இலங்கை குறித்த சான்றிதழை வழங்குவதற்கு இரண்டு வருடங்கள் தாமதித்ததன் காரணமாக இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதியை எதிர்வரும் தை மாதம் முதலாம் திகதி முதல் நிறுத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
அதனால் வடக்கில் 07 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதரம் நேரடியாக பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது. அமெரிக்கா தடையை நீக்குவதற்கு தடை அமல்படுத்தப்பட்ட காலத்துக்கு பின்னரே பரிசீலிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கான நீல நண்டு ஏற்றுமதியில் வட மாகாணம் முன்னிலை வகிக்கிறது. குறித்த ஏற்றுமதி மூலம் மாதம் 1 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை இலங்கை பெறுகிறது.
வடக்கில் மன்னாரில் இருந்து நெடுந்தீவு வரையான கடற் பகுதி வருடம் முழுவதும் நண்டு தொழில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இங்கிருந்தே அதிகளவிலான நண்டுகள் அமெரிக்காவுக்கு ஆறு கிழமைகளுக்கு ஒரு தடவை ஏற்றுமதி செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.




