முற்பதிவு செய்தவர்களை ஏற்றாது சென்ற பேருந்து - நள்ளிரவில் அந்தரித்த பயணிகள்

தமது பயணத்திற்காக முற்பதிவு செய்ய பயணிகளை ஏற்றாது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பயணித்தமை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் , முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு பயணத்தை ஆரம்பித்த பேருந்தில் , நீர்கொழும்பு பகுதியில் நின்று ஏறுவதற்காக மூவர் ஆசனங்களை முற்பதிவு செய்து விட்டு பேருந்துக்காக காத்திருந்தனர்.
அதன் போது, பேருந்தின் நடத்துனர் இரவு 11.45 மணியளவில் பேருந்து குறித்த இடத்திற்கு வரும் என பயணிகளுக்கு அறிவித்திருந்தார்.
அதனை அடுத்து குறித்த பயணிகள் பேருந்துக்காக அவ்விடத்தில் காத்திருந்த போதும் 11.30 மணியளவிலும் தாம் பேருந்துக்காக காத்திருப்பதனை தொலைபேசி ஊடாக நடத்துனருக்கு பயணிகள் தெரிவித்துள்ளனர். அதற்கும் நடத்துனர் அருகில் வந்து விட்டோம் 11.45 மணியளவில் அவ்விடத்தை வந்தடைந்து விடுவோம் என கூறியுள்ளார்.
அந்நிலையில் 11.45 மணிக்கு குறித்த பேருந்து அவ்விடத்தினை தாண்டி சென்றுள்ளது. பயணிகள் மூவரும் பேருந்தினை வழி மறித்த போதிலும் , பேருந்தினை அவ்விடத்தில் நிறுத்தாது சாரதி தொடர்ந்து பயணித்துள்ளார்.
அதனை அடுத்து பயணிகள் நடத்துனருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த போதிலும் , நடத்தினர் தொலைபேசி அழைப்பினை ஏற்கவில்லை. அந்நிலையில் சுமார் 30 நிமிடங்கள் கழித்து தொலைபேசி அழைப்பினை எடுத்த நடத்துனர் , பேருந்து குறிப்பிட்ட இடத்தில் நிற்பதாகவும் , அங்கு வந்து பேருந்தில் ஏறுமாறும் கூறியுள்ளார்.
பயணிகள் நிற்கும் இடத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் பேருந்தினை நிறுத்தி விட்டு , அங்கு வந்து ஏறுமாறு கூறினால் , தாம் நள்ளிரவு வேளை எவ்வாறு அங்கு சென்று பேருந்தில் ஏற முடியும் என நடத்துனரிடம் கோரியுள்ளனர்.
அதற்கு நடத்துனர் , குறித்த இடத்தில் நிற்கிறோம். வந்து ஏறுங்கள் என்றே கூறியுள்ளார்.
இது தொடர்பில் , இலங்கை போக்குவரத்து சபையின் பொறுப்பதிகாரியிடம் தொலைபேசி ஊடாக முறையிட்ட போதிலும் , அவரும் பொறுப்பற்ற விதத்தில் பதில் அளித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை பேருந்து பயணத்திற்கு முற்பதிவு செய்தவர்களை இடையில் ஏற்றாது செல்லும் நிலைமைகள் அண்மைக்காலமாக அதிகரித்து உள்ளதாகவும் , முற்பதிவு செய்தவர்கள் இடையில் ஏறுவதால் , பேருந்து புறப்படும் போது , ஆசனங்கள் கேட்பவர்களை அந்த ஆசனங்களில் ஏற்றி செல்வதால் தான் இடையில் ஏற இருப்பவர்களை இவ்வாறு வேண்டும் என்றே ஏற்றாது செல்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




