SuperTopAds

அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்- மரங்கள் மீது மோதி விபத்து

ஆசிரியர் - Editor IV
அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்- மரங்கள் மீது மோதி விபத்து

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் கடற்கரையில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம் நேற்றையதினம் மாலை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் ட்வின் டால்பின்ஸ் டிரைவ் மற்றும் பீச் பவுல்வர்டு இடையே உள்ள கடற்கரை வாகன நிறுத்துமிடத்தில் இடம்பெற்றுள்ளது.

விபத்தினையடுத்து ஹெலிகாப்டர் இடிபாடுகளில் இருந்து இரண்டு பேர் மீட்கப்பட்டதாகவும், தரையில் இருந்த மூன்று பேர் காயமடைந்ததாகவும் ஹண்டிங்டன் கடற்கரை நகர செய்தித் தொடர்பாளர் அறிக்கையில் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில், வானில் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென பல முறை சுழன்று பனை மரங்கள் மீதும் மற்றும் ஸ்பாவிற்கு PCH வழியாக செல்லும் பாதசாரி பாலத்தின் வெளிப்புற படிக்கட்டு மீதும் மோதியதைக் காட்டுகிறது. 

இதேவேளை குறித்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாவதற்கு முன்பு பாலத்தை நோக்கி சாய்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. 

இவ் விபத்து குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

Radio