SuperTopAds

அநுர அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பொய் வாக்குறுதிகளையே வழங்குகிறது.

ஆசிரியர் - Editor II
அநுர அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பொய் வாக்குறுதிகளையே வழங்குகிறது.

தமிழ் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை கூறிவந்த அனுரா குமார திசாநாயக்கா தலைமையிலான இந்த அரசாங்கம் வெறும் வாக்குறுதிகளை மட்டுமே கூறும் அரசாங்கமாக காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார்.

 பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம் பெற்ற விவாதத்தின் போது இந்த அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் என ஆட்சிக்கு வந்து ஒரு வருடங்கள் கடந்த நிலையில் கடந்த 30 ஆம் திகதி நீக்குவதாக அறிவித்த நிலையில் இன்று வரை நீக்கப்படவில்லை. 

மாணவர்களை இலக்கு வைக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் 

ஆட்சிக்கு வர முன்னர் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என வீதிகளில் போராட்டம் நடத்திய அன்றைய ஜேவிபினர் தான் இன்றைய ஆட்சி அதிகாரத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியினர். 

கடந்த வருடம் கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற இல்ல மெய் வல்லுநர் போட்டி அலங்காரம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஆசிரியர்களையும் மாணவர்களையும் இலக்கு வைத்து பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதன் ஒரு அங்கமாக பாடசாலை அதிபருக்கு குறித்த இல்ல அலங்காரத்தில் பங்குபற்றிய மாணவர்களின் விவரங்களை தருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கேட்கும் அளவுக்கு இந்த அரசாங்கம் தமிழ் மக்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் ஒடுக்க நினைக்கிறது.

மாணவர்கள் தமது இனத்துக்கு நடந்த அநீதிகளை வலிகளை படமாகவோ அல்லது சித்திரமாகவோ வரைந்தால் இந்த அரசாங்கம் பயங்கரவாதமாக பார்க்கும் மனோநிலைக்கு வந்துவிட்டது

வலி வடக்கு தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலை 

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா இறுதியாக யாழ்ப்பாணம் வருகை தந்த போது இராணுவத்திடம் இருக்கின்ற மக்களின் காணிகள் மக்களிடமே வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் வசாவிளானுக்கு கிழக்குப் பக்கமாக உள்ள ஏழு நபர்களுக்கு சொந்தமான தனியார் காணியில் இராணுவத்தின் தேவைக்காக வைத்தியசாலை நிர்மாண பணிகள் இடம்பெற்று வருகிறது. 

30 வருடங்களுக்கு மேலாக தமது சொந்த நிலங்களை இழந்த வலி வடக்கு மக்கள் தமது நிலத்தை மீட்பதற்காக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்ற நிலையில் இந்த அரசாங்கம் மக்களின் காணிகளில் வைத்திய சாலையை கட்டுகிறது. 

அமைச்சர் பிமல் ரத்நாயக்க பொய் உரைக்கிறார்.

யாழ்ப்பாணம் வருகை தந்த துறைசார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஆறு மாத காலத்திற்குள் அபிவிருத்தி செய்யப் போவதாக வாக்குறுதி வழங்கி பல மாதங்கள் கடந்து விட்டது. 

யாழ்ப்பாண விமான நிலையத்தை மக்கள் பயன்படுத்துவது குறைவு என்ற நொண்டி சாட்டை கூறி அபிவிருத்தி பணிகளை நிறுத்துவதற்கு இந்த அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. 

வெறுமனே இந்தியாவுக்கு மட்டும் பயணத்தை மேற்கொள்ளும் அளவுக்கு இந்த விமான நிலையத்தின் செயல்பாடுகள் இருக்கின்ற நிலையில் அநேகமானவர்கள் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஒரு நாடு பணம் தரலாம் என்கிறது ஓடுதளம் அமைப்பதற்கு தேவையான நிலம் இருக்கிறது ஆனால் அபிவிருத்தி செய்யப் போவதாக வாக்குறுதி வழங்கி தமிழ் மக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றுகிறது. 

ஆகவே இந்த அரசாங்கம் வடக்கு மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்குவதை விட வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இந்த அரசாங்கம் முன்வர வேண்டும் என மேலும் தெரிவித்தார்

Radio