SuperTopAds

பேச்சுவார்த்தையில் நாங்கள் இல்லாமல் எப்படி? - ஜெலென்ஸ்கி திட்டவட்டம்!

ஆசிரியர் - Admin
பேச்சுவார்த்தையில் நாங்கள் இல்லாமல் எப்படி? - ஜெலென்ஸ்கி திட்டவட்டம்!

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு திட்டத்திற்கு உக்ரைன் என்றும் ஏற்றுக் கொள்ளாது என்று உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நிறுத்ததிற்கான மத்தியஸ்தத்தை செய்து வருகிறார். இது தொடர்பாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை ஏற்கனவே அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.   

இந்நிலையில், உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விரைவில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

அமெரிக்கா-ரஷ்யா ஆகிய இரு நாட்டு தலைவர்களும் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி X சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு எந்தவொரு சலுகையையும் உக்ரைன் வழங்காது என தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் இல்லாமல் எடுக்கும் எந்தவொரு முடிவு எதையும் சாதிக்காது, அவை இறந்தே பிறந்த முடிவுகள் மற்றும் அவை செயல்படுத்த முடியாதவை என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் டிரம்ப்-புடின் சந்திப்பை குறிப்பிட்டு நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தை போர் களத்தின் யதார்த்தத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளது.

எத்தகைய பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறோம், ஆனால் அதில் எங்களின் பங்கேற்பு கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து உருவாக்கப்படும் நிரந்தர அமைதிக்கு தயாராக உள்ளோம், அதே சமயம் அவை உக்ரைனின் இறையாண்மையை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Radio