தம்பிலுவில் மயானத்தில் அகழ்வுப் பணிகள் நிறுத்தம்

தம்பிலுவில் மயானத்தில் அகழ்வுப் பணிகள் நிறுத்தம்
தம்பிலுவில் பொது மயானத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு மாலை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.
நபரொருவரை கொலை செய்து அப்பகுதியில் புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்கமைய இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலத்திற்க்கு அமைவாக தோண்டப்படும் பொது மயானம் நிறைவடைந்துள்ளது.
வியாழக்கிழமை (31) முற்பகல் முதல் அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானம் இவ்வாறு ஜேசிபி இயந்திரம் மூலம் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் தோண்டப்பட்ட பின்னர் மாலை குறித்த செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.
இதன் போது மட்டக்களப்பு சிறைச்சாலையில் மற்றுமொரு வழங்கில் தனது தாயை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைவாசம் அனுபவித்து வருபவரும் கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அனோசியஸ் சுரேஸ்கண்ணா எனப்படும் யூட் எனும் சந்தேக நபர் குறித்த பொது மைதானத்திற்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரபப்ட்டிருந்தார்.
மட்டக்களப்பினை பிறப்பிடமாக கொண்ட அவர் கடந்த காலங்களில் திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தாடர்பு சிம் விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி படுகொலை செய்து குறித்த பொது மைதானத்தில் புதைத்திருப்பதாக அரச சாட்சியாக மாறி குற்றப்பலனாய்வு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
இதற்கமைய குறித்த பொது மைதானத்தில் தேடுதல் மற்றும் தோண்டப்பட்ட பின்னர் எதுவும் கிடைக்காத காரணத்தினால் அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிபதி ஏ.சி றிஸ்வான் உத்தரவிற்கமைய குறித்த செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.
இதன்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.எம். றியாஸ் உட்பட் பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பொலிஸார் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இனிய பாரதி என அழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் நெருங்கி செயற்பட்ட ஒருவராவார்.கொலைஇ கொள்ளை மற்றும் கடத்தல் ஆகிய சம்பவங்கள் தொடர்பில் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமாரினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பல இடங்கள் அடையாளம் காணபபட்டுள்ள நிலையில் பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதுகளின் பின்னணி:
2007 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இனியபாரதி மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோர் கடந்த ஜூலை 6 ஆம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதிகளில் வைத்து CIDயினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கைதை தொடர்ந்து, இனிய பாரதியின் சகாக்களான முன்னாள் சாரதி செந்தூரன், திருக்கோவில் விநாயக புரத்தைச் சேர்ந்த 'தொப்பி மனாப்' என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன், வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 'யூட்' என அழைக்கப்படும் ரமேஷ் கண்ணா ஆகியோரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.













