ஊடகவியலாளர் ஹுதா உமர் மீதான தாக்குதல்: சந்தேக நபர்களை கைது செய்ய உத்தரவு

ஊடகவியலாளர் ஹுதா உமர் மீதான தாக்குதல்: சந்தேக நபர்களை கைது செய்ய உத்தரவு; தலைமறைவாகி உள்ளவர்களைத் தேடி பொலிஸார் வலைவீச்சு
சிரேஷ்ட ஊடகவியலாளர், மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் செயலாளர் நூருல் ஹுதா உமர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்து சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாளிகைக்காட்டை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர், கடந்த 11ந் திகதி இரவு வீடு நோக்கி பயணித்து கொண்டிருந்த போது பள்ளிவாசல் முரண்பாடு மற்றும் செய்தி அறிக்கையிடல் தொடர்பில் முரண்பட்ட தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் தலைமையில் அங்கு நின்ற காடையர்களால் தாக்கப்பட்டார்.
தாக்குதல் நடந்த பின்னர் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் ஹுதா உமர் முறைப்பாடு செய்திருந்ததுடன் சாய்ந்தமருது வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றிருந்தார்.
இந்த நிலையிலேயே சந்தேக நபரை கைது செய்து சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த காரைதீவு பொலிஸார் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதுடன் விசேட குழுவமைத்து தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆயினும் சந்தேக நபர்கள் தாக்குதல் நடந்த தினத்திலிருந்து தலைமறைவாகியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்ய பொலிஸாருக்கு கோரிக்கை முன்வைத்து மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இதேவேளை, அவர்களை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது.




