யாழில் கடலலையில் சிக்கிய சிறுவனைப் போராடிக் காப்பாற்றிய நண்பர்கள்

ஆசிரியர் - Admin
யாழில் கடலலையில் சிக்கிய சிறுவனைப் போராடிக் காப்பாற்றிய நண்பர்கள்

யாழ்.பருத்தித்துறை முனைக் கடலில் நீந்திக் கொண்டிருந்த சிறுவனை கடலலை வெகுதூரம் இழுத்துச் சென்றுள்ள நிலையில் சக நண்பர்களால் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நேற்றைய தினம் (21) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தனது நண்பர்களுடன் சேர்ந்து குறித்த 14 வயதுச் சிறுவன் பருத்தித்துறை முனைக்கடலில் நீந்திக் கொண்டிருந்தான். அப்போது திடீரென வந்த கோர அலை குறித்த சிறுவனை நீண்டதூரம் இழுத்துச் சென்றுள்ளது. சிறுவன் கடலலையில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருந்தான். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விரைந்து செயற்பட்ட அவனது நண்பர்கள் படகின் கயிறு மூலமாகக் குறித்த சிறுவனைப் போராடிக் காப்பாற்றியுள்ளனர்.

இதேவேளை, கடலலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனை அவனது சக நண்பர்களான சிறுவர்கள் காப்பாற்றிய சம்பவம் பருத்துத்துறைப் பகுதியில் முக்கியமாகப் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. அத்துடன் சிறுவனைக் காப்பாற்றிய சக நண்பர்களின் செயற்பாட்டினைப் பல தரப்பட்டவர்களும் பாராட்டியுள்ளனர்.