SuperTopAds

பிரம்டன் நினைவகம் குறித்து கனடாவுடன் இராஜதந்திர பேச்சு!

ஆசிரியர் - Admin
பிரம்டன் நினைவகம் குறித்து கனடாவுடன் இராஜதந்திர பேச்சு!

கனடா, பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் தொடர்பில் கனடாவின் மத்திய அரசுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலை இனிவரும் காலங்களில் ஏற்படாமல் இருப்பதை தடுக்கும் பாரிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு’’ என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.     

பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘‘2025.05.10 ஆம் திகதியன்று கடனாவில் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் சார்பில் இந்த விசேட கூற்றை முன்வைக்கின்றேன். இந்த நினைவகம் திறக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம். இந்த விவகாரம் தொடர்பில் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

கனடாவில் பிரம்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவகம் திறந்துவைக்கப்பட்ட போது பிரம்டன் நகர மேயர், ஏனைய நகர மேயர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்துகொண்டுள்ளனர். கனடாவில் உள்ள இரண்டு தமிழ்த் தரப்பினர்கள் இந்த நினைவகத்தை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை 2022ஆம் ஆண்டு ஆரம்பித்துள்ளனர்.

தமிழின அழிப்பு நினைவகத்துக்கு கனடாவில் உள்ள இலங்கையின் கொன்சியூலர் காரியாலயம் பொறுப்பான தரப்பினர்களுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம், வெளிவிவகார அமைச்சு மற்றும் கனடாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கொன்சியூலர் காரியாலயம் இந்த நினைவகத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்து இராஜதந்திர மட்டத்தில் தலையீடு செய்துள்ளது.

2021ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியான எதிர்ப்புகளை இலங்கை வெளிப்படுத்திய நிலையிலும் 2025.05.10ஆம் திகதியன்று இந்த நினைவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலை இனிவரும் காலங்களில் ஏற்படாமல் இருப்பதைத் தடுக்கும் பாரிய பொறுப்பு அரசாங்கத்துக்குண்டு.

இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை. கனடாவால் அமுல்படுத்தப்பட்ட இனவழிப்பு வாரத்தை ஏற்க முடியாதென்பதை வெளிவிவகாரத்துறை அமைச்சு கொழும்பிலுள்ள கனடா உயர்ஸ்தானிகராலயத்துக்கு அறிவித்துள்ளது.

அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் நல்லிணக்க முயற்சிக்கு தடையேற்படுத்தும். கனடாவில் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் தொடர்பில் கனடாவின் மத்திய அரசுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.