யாழ்.சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியின் அவசியங்கள் தொடர்பில் உலக வங்கியிடம் எடுத்துரைப்பு

காங்கேசன்துறையில் 351 ஏக்கரில் கைத்தொழில் வலயமாக பிரேரிக்கப்பட்ட பகுதியில் எதிர்கால முதலீடு மற்றும் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் அபிவிருத்தி தொடர்பாகவும், அதற்கான தொழில் வாய்ப்புக்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பாகவும் உலக வங்கியின் குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் விளக்கமளித்துள்ளார்.
உலக வங்கி குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை இன்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இக் கலந்துரையாடலில், விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் போன்ற துறைகளின் தற்போதைய நிலவரங்களும், வாழ்வாதாரத் துறைகளுக்கா தேவைப்பாடுகளும் உள்ளூர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி சந்தை வாய்ப்புக்கள் தொடர்பாக மாவட்ட செயலர் விளக்கமளித்தார்.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான சுற்றுலாத் துறை அபிவிருத்தி தொடர்பில் விசேடமாக யாழ்ப்பாண கோட்டை மற்றும் பழைய கச்சேரியினை புனரமைத்து மரபுரிமை சுற்றுலா அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்கான அவசியத்தினையும் எடுத்துக்கூறினார்.
அத்துடன் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான நிலையான வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பான கோரிக்கைகளும், தெல்லிப்பளை காங்கேசன்துறையில் 351 ஏக்கரில் கைத்தொழில் வலயமாக பிரேரிக்கப்பட்ட பகுதியில் எதிர்கால முதலீடு மற்றும் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் அபிவிருத்தி தொடர்பாகவும், அதற்கான தொழில் வாய்ப்புக்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
அதேவேளை தனியார் துறைகளின் அபிவிருத்தி மூலம் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்கமுடியும் எனவும், அதற்கான தனியார் துறைகளின் முதலீடுகளுக்கான தேவைப்பாடுகள் மற்றும் வசதி வாய்ப்புகள் தொடர்பாகவும்,யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தினை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியின் அவசியம் தொடர்பாகவும் மாவட்ட செயலர் விளக்கமளித்தார்.
இக் கலந்துரையாடலினைத் தொடர்ந்து மாவட்ட செயலரின் கோரிக்கைக்கு அமைவாக பழைய கச்சேரியினை குழுவினர் பார்வையிட்டனர்.
இக் கலந்துரையாடலில் உலக வங்கி குழுவின் வதிவிடப் பிரதிநிதி விக்டர் அந்தோணிப்பிள்ளை, மாலைதீவு மற்றும் இலங்கைக்கான வதிவிட முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட செயற்பாட்டு அலுவலர் ஸ்றீபன் மசீங், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு அலுவலர் ருக்சினா குணரட்ன மற்றும் இணைந்த செயற்பாட்டு அலுவலர் மொகமட் கவீஸ் சைநூடீன் ஆகியோர் பங்குபற்றினார்கள்.