தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூடு- இந்தியா கடும் கண்டனம்!
இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியமைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்களை இன்று அதிகாலை கைது செய்த போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, 13 மீனவர்களில் இருவருக்கு படுகாயங்களும் மூவருக்கு சிறு காயங்களும் ஏற்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய துணைத்தூதவர் சாய் முரளி காயமடைந்த மீனவர்களை வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்து, மீனவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இன்றையதினம் புதுடெல்லியில் உள்ள இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகரை நேரில் அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சிடம் இந்த விடயம் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வாழ்வாதார பிரச்சினை என்பதால் மனிதாபிமான முறையில் மீனவர்களின் பிரச்சினையை கையாள வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இத்தகைய தாக்குதல்களை நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்விடயத்தில் இரு அரசாங்கங்களுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது.