SuperTopAds

மழையால் வயல் நிலங்கள் நாசம்-அம்பாறையில் சம்பவம்(DRONE Video/photoes)

ஆசிரியர் - Editor III
மழையால் வயல் நிலங்கள் நாசம்-அம்பாறையில் சம்பவம்(DRONE Video/photoes)

மழையால் வயல் நிலங்கள் நாசம்-அம்பாறையில் சம்பவம்(DRONE Video/photoes)

 

அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு கடந்த  செவ்வாய்க்கிழமை (14)  திறந்து விடப்பட்ட நிலையிலும் இடைவிடாத மழை வீழ்ச்சி காரணமாகவும் வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று அம்பாறை மாவட்டத்தில்  வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன்  அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் சில இடங்களில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்றது.இம்மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக தாழ்நிலங்களும்  வயல் நிலங்களும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை  மாவட்டம் சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி  பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  சவளக்கடை  கமநல சேவை நிலையத்திற்குட்பட்டு செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மை செய்கையில் 2000 ஏக்கருக்கும் அதிகமாக செய்கை பண்ணப்பட்டுள்ளன.  சவளக்கடை, அன்னமலை, வேப்பயடி, 5ஆம் கொலனி ,  போன்ற பல்வேறு பகுதிகளில் காணப்படும் வயல் நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகரித்த மழை வீழ்ச்சி காரணமாக  சில   குளங்களின்  வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வேளாண்மை 70 நாட்கள் பயிராக காணப்படுவதனால், குடலைப்பருவத்தில் இருந்து கதிர்பருவத்திற்கு மாறும் இவ் வேளையில் இவ்வாறு அதிகரித்த மழை வீழ்ச்சி மற்றும் குளங்களிலிருந்தும் நீர் திறந்து விடப்பட்டுள்ளததனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தினால் தாம் பாதிக்கப்பட்டு மீண்டௌ முடியாத நிலையில் இருக்கும் வேளையில் இவ்வருட ஆரம்பத்திலேயே அடுத்த வெள்ளமும் தம்மை அதிகம் பாதித்துள்ளதாகவும் விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.

நெல்லுக்கான உத்தரவாத விலையை இன்னும் நிர்ணயிக்காத நிலையில் தாம் எதிர்பார்த்த விழைச்சலை பெறுவதிலும் சிக்கல் நிலவுவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.