இ.போ.ச டிப்போ காவலாளியை கொலை செய்துவிட்டு பணம் கொள்ளை..
நுவரெலியா - இ.போ.ச டிப்போவில் பணிபுரிந்த காவலாளி ஒருவரைக் கொலை செய்துவிட்டு அங்கிருந்த 9 இலட்சம் ரூபா பணத்தை சிலர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டிப்போவில் காவலாளியாகப் பணியாற்றிய நுவரெலியா கல்பாய பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயதான கே.லோகேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணையில் தெரியவருவதாவது,
சிலர் காவலாளியை கொலை செய்துவிட்டு டிப்போவின் அலுமாரியில் இருந்த சுமார் 9 இலட்சம் ரூபாயை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவலாளி தனது பாதுகாப்பு அறையில் தங்கியிருந்ததாகவும், அப்போது சிலர் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கிவிட்டு பணத்தை கொள்ளையிட்டுச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவத்தின் போது டிப்போவின் பொறுப்பதிகாரியும் காசாளரும் டிப்போவில் தங்கியிருந்த போதிலும் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் ,நுவரெலியா டிப்போவில் நேற்று வியாழக்கிழமை (05) சேவையிலீடுபட்ட பேருந்துகளில் கிடைத்த வருமானம், வங்கிப் பணிகளுக்காக அலுமாரியில் வைக்கப்பட்டிருந்ததாக நுவரெலியா டிப்போவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.