ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட வடமாகாண இளைஞர்கள்! மீட்டுத்தர உறவினர்கள் கோரிக்கை..
வடமாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோரால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் நேற்று செவ்வாய்க்கிழமை (26) காலை முறைப்பாடு செய்யப்பட்டது.
தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு ஆளுநரிடம் அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
யாழ்ப்பாணம், கரவெட்டி, முள்ளியவளையைச் சேர்ந்த இளைஞர்களின் பெற்றோரே, ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை (26) ஆளுநரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
பெற்றோரது கோரிக்கையை செவிமடுத்த ஆளுநர், உடனடியாக வெளிவிவகார அமைச்சின் செயலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தினார். பெற்றோர்களிடம் அவர்களது விவரங்களைப் பெற்று வெளிவிவகார அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.