SuperTopAds

சென்னையில் கனமழை: சாலைகளில் சூழ்ந்த மழைநீர்!

ஆசிரியர் - Admin
சென்னையில் கனமழை: சாலைகளில் சூழ்ந்த மழைநீர்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது சென்னைக்குக் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 

இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாகச் சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதே சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.     

இதன் காரணமாகச் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதியடைந்துள்ளனர். அந்த வகையில் பெரம்பூரில் உள்ள முரசொலி மாறன் மேம்பாலத்தின் கீழ்த்தளத்தில் மழை நீர் நிரம்பியுள்ளதாதல் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. 

பெரம்பூர் ஹை ரோடு, பெரம்பூர் பஸ் நிலையம் அருகில் உள்ள நெல்வயல் சாலை, வியாசர்பாடி ஜீவா ரயில்வே ஸ்டேஷன், கன்னிகாபுரம் ஆகிய இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளன. அதே போன்று கொளத்தூர் முதல் பிரதான சாலை, பெரவள்ளூர் கே -5 காவல் நிலையம், கொளத்தூர் ஜவகர் நகர் 6வது பிரதான சாலை, கொளத்தூர் அகதீஸ்வரர் நகர் கங்கா திரையரங்கம் அருகிலும் மழைநீர் சூழ்ந்துள்ளன.