யானை தாக்கியத்தில் ஹயஸ் வாகன சாரதி உயிரிழப்பு, வாகனம் முற்றாக சேதம்..
பொலன்னறுவை கிரித்தல - பக்கமுன பிரதான வீதியில் சோமியேல் பகுதியில் பயணித்த வேன் ஒன்றை காட்டு யானை தாக்கியதில் வேன் சாரதி உயிரிழந்துள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை பலுகஸ்தமன சேவாகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய வேனின் சாரதியே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது, கிரித்தல - பக்கமுன பிரதான வீதியில் சோமியேல் பகுதியில் காட்டு யானை ஒன்று வீதியை கடக்க முற்பட்ட போது அவ்வழியாக பயணித்த வேன் ஒன்று காட்டு யானை மீது மோதியுள்ளது.
பின்னர், இந்த காட்டு யானையானது குறித்த வேனை தாக்கியுள்ள நிலையில் வேனானது அருகில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது, வேனில் சாரதி மாத்திரமே இருந்துள்ளதாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாவிற்குச் சென்ற சிலரை வீட்டில் இறக்கி விட்டு மீண்டும் வீடு நோக்கிப் பயணித்த வேன் ஒன்றே தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.