SuperTopAds

சிறுபாண்மைக் கட்சிகளின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னரே எமது முடிவினை வெளியிடுவோம்

ஆசிரியர் - Editor III
சிறுபாண்மைக் கட்சிகளின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னரே எமது முடிவினை வெளியிடுவோம்

சிறுபாண்மைக் கட்சிகளின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னரே எமது முடிவினை வெளியிடுவோம் - சமூக செயற்பாட்டாளர் உதுமான்கண்டு நாபீர் தெரிவிப்பு

----------------------------------------

செப்டம்பர் மாதம் சிறுபான்மைக் கட்சிகள் எதிர்கொள்ளவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்களை ஆதரிப்பது தொடர்பாக சிறுபான்மைக் காட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை அவதானித்த பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான முடிவினை அறிவிப்போம் என அம்பாறை மாவட்டத்தினை மையமாகக் கொண்டு எழுச்சி பெற்று வருகின்ற சமூகசேவை நிறுவனமான நாபீர் பௌன்டேஷன் நிறுவனர் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் தெரிவித்தார். செப்டம்பர் மாதம் 21ம் திகதி இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்காக பிரதான வேட்பாளர்களால் கட்டுப்பணம் செலுத்தப்பட்ட நிலையில் பொதுஜனபெரமுன போன்ற கட்சிகள் தமது முடிவினை பிற்போட்டு வருகின்றன. இதற்கமைய சிறுபான்மைக் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக ஏற்கனவே தங்களால் எடுக்கப்பட்ட முடிவுகளை தற்போது வெளியிட்டு வருகின்ற நிலையில் இன்னும் சில கட்சிகள் அவர்களது கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை வெளியிடவில்லை. அதற்கமைய அவர்களும் தங்களது தீர்மானங்களை வெளியிடுகின்றபோது அதனை அவதானித்த பின்னரே எமது கோரிக்கைகள் மற்றும் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான தீர்மானத்தை வெளியிடுவதாக எமது செய்திச் சேவைக்கு அவர் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமைகளுக்கு எதிரான செயற்பாடுகள் போன்ற விடயங்களால்  மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகள் பாதிக்கப்பட்டு வெறும் அமைச்சுக்காகவும் அதிகாரத்திற்காகவும் அப்பாவி மக்களின் வாக்குகளை வேட்டையாடுகின்ற ஒரு நிலையே காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் காலாகாலமாக மக்களை அரசியல் ஏமாற்று வித்தைகள் ஊடாக பாராளுமன்றம் சென்று அங்கு உறங்குநிலை பாராளுமன்ற உறுப்பினர் வரிசையில் இருக்கைகளை சூடாக்கிக் கொண்டிருக்கும் நிலைமைகளை இனியும் நாம் அனுமதிக்க முடியாது. கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற சிறுபான்மை முஸ்லிம் மக்களின் பொருளாதாரம் மற்றும் உரிமைகள் தொடர்பில் நாம் ஒரு திடமான திட்டங்களை  வரைந்துள்ளோம். அவற்றினை நாங்கள் பிரதான வேட்பாளர்களிடம் முன்வைக்கின்ற போது அது தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை வழங்குகின்ற ஜனாதிபதி வேட்பாளருக்கே எமது ஆதரவு இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்