கிளப் வசந்தவுக்கு நடந்தது உனக்கும் நடக்கும்! சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொலை மிரட்டல்..
“ கிளப் வசந்தவுக்கு செய்ததை உனக்கும் செய்வோம் ” என கூறி கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரிக்கு சுவரொட்டியில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சுவரொட்டி கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் ஒட்டப்பட்டிருந்துள்ளதுடன் காரியாலயத்தின் மீது கழிவு எண்ணெய் வீசி தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டியில், கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி உடனடியாக கெக்கிராவ பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும் இல்லையென்றால் கிளப் வசந்தவுக்கு செய்ததை அவருக்கும் செய்வோம் என எழுதப்பட்டுள்ளது.
பல மில்லியன் ரூபா பெறுமதியான விஷம் கலந்ததாகக் கூறப்படும் கோதுமை மா கைப்பற்றப்பட்டமை மற்றும் பால் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தொடர்பிலும் கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்களை சேதப்படுத்தியமை தொடர்பிலும்
இரண்டு சட்டத்தரணிகளுக்கு எதிராக கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரியால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரிக்கு இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.