SuperTopAds

16 வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம்! குற்றவாளிக்கு 30 வருட சிறைத்தண்டணை..

ஆசிரியர் - Editor I
16 வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம்! குற்றவாளிக்கு 30 வருட சிறைத்தண்டணை..

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமாரவினால் குற்றவாளிக்கு நேற்று (24) குறித்த தண்டனை விதிக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

மொரட்டுவை, லக்ஷபதி, கனகரத்ன மாவத்தையில் வசிக்கும் ரஜீவ ரவிநாத் ஜயதிலக்க என்ற 38 வயதுடைய நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2021 ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர் 

கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தால் கைது செய்யப்பட்டு மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, 

சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.சந்தேகநபர் மூன்று குற்றச்சாட்டுக்களில் ஒன்றில் இருந்து விடுவிக்கப்பட்டதோடு இரண்டு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

மேற்படி சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக பிரதிவாதிக்கு 50,000 ரூபா அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 500,000 ரூபா நட்டஈடு வழங்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் ஆறு மாத தளர்த்தப்பட்ட சிறை தண்டனையும், நஷ்ட ஈட்டு தொகையை செலுத்தாவிட்டால் 18 மாத தளர்த்தப்பட்ட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மற்றுமொரு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் பேரில் கண்டி மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட இடைநிறுத்தப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை அமுல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறை தண்டனை காலத்தை தலா 15 ஆண்டுகள் என இரண்டு சந்தர்ப்பங்களில் தனித்தனியாக அனுபவிக்கவும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, குற்றவாளி அபராதம் மற்றும் நட்டஈட்டினை செலுத்தவில்லை என்றால், மொத்தமாக 34 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.