பொன்சேகாவையும், வீரவன்சவையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்! - இன்பராசா
முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா மற்றும் விமல் வீரவன்ச போன்றவர்களை முதலில் கைது செய்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.
நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியினால் கரும்புலிகள் நாள் கடந்த ஐந்தாம் திகதி நினைவு கூரப்பட்டிருந்தது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் முதல் முறையாக வடக்கு கிழக்கில் இந்த கரும்புலிகள் நாள் அனுஷ்டிக்கப்பட்டமை தொடர்பில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்திருந்தனர்.
கரும்புலி நாளை அனுஷ்டித்த அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் உடனடியாக அவர்கள் கைது செய்யப்படாவிட்டால் வடக்கு கிழக்கில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது போய்விடும் எனவும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அத்துடன் வடக்கானது தனி இராஜ்ஜியமாக செயற்பட்டு வருவதாகவும் அங்கு நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பில் அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுப்பதும் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் விமர்சனம் வெளியிட்டுள்ளார் .
பெரும்பான்மையின அரசியல்வாதிகளின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா, தமிழ் சிங்கள இனங்களுக்கு இடையில் மோதலை உருவாக்க முனையும் சரத் பொன்சேகா மற்றும் விமல் வீரவன்ச போன்றோரை முதலில் கைது செய்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.