SuperTopAds

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டிடத்தை திறந்துவைத்த ஐனாதிபதி...

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டிடத்தை திறந்துவைத்த ஐனாதிபதி...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதி  [Clinical Training and Research Block  - CTRB]  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நேற்று (24/05/2024) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், யாழ் மருத்துவப் பீடத்தின் பீடாதிபதி, பல்கலைக்கழக பதிவாளர், விரிவுரையாளர்கள், மாகாண பிரதம செயலாளர், ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

942 மில்லியன் ரூபா செலவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகில் 08 மாடிகளை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள  இந்த கட்டட தொகுதி 6000 சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. 

இதில் மருத்துவக் கற்கை நெறிக்கான விரிவுரை, பரீட்சை மண்டபங்கள், கேட்போர்கூடம் மற்றும் மருத்துவத்திறன் விருத்தி ஆய்வுகூடங்கள் ஆகியன காணப்படுகின்றன.

சத்திர சிகிச்சை அறைகள், மீட்பு அறைகள் (recovery rooms), சத்திர சிகிச்சை கழிவுகளை அகற்றும் பகுதிகள் (disposal zones), கிருமித் தொற்றகற்றும் அறைகள்  (sterilization units), சத்திர சிகிச்சை ஆயத்த அறைகள் (preparation rooms) மற்றும் மருத்துவ களஞ்சிய சேமிப்பு வசதிகளும்,

பணியாளர் உடை மாற்றும் அறைகள் (Personnel changing rooms), வரவேற்பு பகுதி (Reception area), நோயாளர் காத்திருப்பு அறைகள் (patient waiting rooms) உள்ளிட்ட பல வசதிகளும் இந்த புதிய கட்டட தொகுதியில்  காணப்படுகின்றன.


அத்துடன் பிராந்திய ஒத்துழைப்பு மையமும்  (Regional Collaboration Centre-RCC) இங்கு ஸ்தாப்பிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ஆராச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், மருத்துவ கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் 

மற்றும் மருத்துவ வல்லுநர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த பிராந்திய ஒத்துழைப்பு மையம் ஸ்தாப்பிக்கப்பட்டுள்ளது.