ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த தாய்!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளும் மிகவும் ஆரோக்கியத்துடன் உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்ற தாயே இந்த குழந்தைகளை கடந்த ஏப்பிரல் மாதம் 5 ஆம் திகதி பிரசவித்துள்ளார்.
மருத்துவதுறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்தியர் சரவணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை (22) காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கலாரஞ்சினி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணன்,
குழந்தை நல வைத்திய நிபுணர் மதன் ஆகியோர் இங்கு கருத்து தெரிவித்தனர்.இதன்போது சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் கொண்டுவரப்பட்டு ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் மைதிலி உட்பட வைத்தியர்கள், தாதியர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு ஒரே சூழில் நான்கு குழந்தைகள் பிறக்கும் செயற்பாடானது 5 இலட்சத்து 70ஆயிரம் தாய்மார்களிலேயே இடம்பெறுவதாகவும் அதுவும் செயற்கை முறையிலான கருத்தரிப்பு மூலமே அவ்வாறான விடயமும் சாத்தியமாக காணப்படும்.
இந்நிலையில், இயற்கையாக கருத்தரித்து சுகப்பிரசவமாக நான்கு குழந்தைகளை இந்த தாய் பிரசவித்ததானது மருத்துவதுறையில் மிகவும் அரிதான விடயமாக பார்க்கப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணன் தெரிவித்தார்.
பிறந்த நான்கு குழந்தைகளும் மிகவும் ஆரோக்கியத்துடன் உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சினி தெரிவித்தார்.
இதேநேரம் தமது பிரசவத்திற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது தமக்கு சகல வழிகளிலும் உதவியவர்களுக்கு நான்கு பிள்ளைகளை பிரசவித்த தாயார் இதன்போது நன்றி தெரிவித்தார்.