க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு சென்றிருந்த மாணவிகள் இருவரை காணவில்லை..
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகப் பரீட்சை நிலையத்திற்குச் சென்ற இரு மாணவிகள் மீண்டும் வீடு திரும்பவில்லை என முறைப்பாடொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாணவிகள் இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை (14) சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகப் பரீட்சை நிலையத்திற்குச் சென்றுள்ள நிலையில் அவர்களில் ஒரு மாணவி தனது பெற்றோருடன் பரீட்சை நிலையத்திற்குச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல்போன இரு மாணவிகளும் நெருங்கிய நண்பர்கள் எனவும் இவர்கள் இருவரையும் பரீட்சை நிலையத்திற்கு அருகில் வைத்துப் பார்த்ததாகவும் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் சிலர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.