SuperTopAds

லேண்டர், ரோவர் மீண்டும் செயல்பட வாய்ப்பு!! -இஸ்ரோ தலைவர் தகவல்-

ஆசிரியர் - Editor II
லேண்டர், ரோவர் மீண்டும் செயல்பட வாய்ப்பு!! -இஸ்ரோ தலைவர் தகவல்-

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு நடத்த சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் சூரிய சக்தி மூலம் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. 

இதனால் லேண்டர், ரோவர் நிலவில் தரையிறங்கிய அடுத்த 14 நாட்களுக்கு தனது பணிகளை திட்டமிட்டபடி செய்து அந்த தகவல்களை இஸ்ரோவிற்கு அனுப்பி வைத்தது.

பின்னர் நிலவில் இரவுகாலம் ஆரபித்ததால் லேண்டர், ரோவர் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது பகல் பொழுது ஆரம்பித்த நிலையில் அவற்றை உறக்க நிலையில் இருந்து விழிக்க செய்யும் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில்;-

லேண்டர், ரோவரிடம் இருந்து இதுவரை எந்த சமிக்ஞையும் இல்லை. ஆனால் அது வராது என்று என்னால் கூற முடியாது. முழு சந்திர நாள் வரையும் (14 பூமி நாட்கள்) நாம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த காலம் முழுவதும் சூரிய ஒளி தொடர்ந்து இருக்கும், அதாவது வெப்பநிலை மட்டுமே உயரும். வெப்பநிலை அதிகரிக்கும் வரை, உள்ளே உள்ள அமைப்புகள் வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே அமைப்புகள் 14 ஆவது நாளில் கூட எழுந்திருக்கலாம். 

அது எப்போது நடக்கும் என்று கணிக்க வழி இல்லை. 2 கருவிகளும் மீண்டும் செயல்படுவதால் பல நன்மைகள் ஏற்படும். ஏற்கனவே நாங்கள் செய்த பல சோதனைகள் எங்களுக்கு தரவை வழங்கியுள்ளன, ஆனால் அது காலப்போக்கில் மாறக்கூடும் என்றார்.

இதனிடையே நிலவின் தென் துருவத்தில் ஆய்வில் ஈடுபட்ட ரோவரின் பின்புற சக்கரங்களில் இந்திய தேசிய சின்னம் மற்றும் சந்திர மண்ணில் இஸ்ரோ லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. அந்த முத்திரைகள் ரோவர் ஆய்வில் தெளிவாக விழவில்லை. 

இது ஒரு நல்ல அறிகுறி என்கின்றனர் விஞ்ஞானிகள். தென் துருவப் பகுதியில் உள்ள நிலவு மண்ணின் பண்புகள் தொடர்பில் புதிய புரிதல். தென் துருவப் பகுதியில் உள்ள மண் தொடர்பான புதிய தகவல்கள் என்பது பல எதிர்கால பயணங்களுக்கு இலக்காக உள்ளது. 

நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், நிலவின் மண் தூசி நிறைந்ததாக இல்லை, ஆனால் கட்டியாக உள்ளது. மண்ணை ஏதோ பிணைக்கிறது, மண்ணை என்ன பிணைக்கிறது என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.