தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் பெளத்த மதத்திற்கு பாதுகாப்பு இருந்தது, புலிகள் காவி உடையை மதித்தார்கள்! சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் பெளத்த மதத்திற்கு பாதுகாப்பு இருந்தது, புலிகள் காவி உடையை மதித்தார்கள்! சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர்..

தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும் மாறாக பாதுகாப்பே இருந்தது அதற்கு காரணம் விடுதலை புலிகள் நாங்கள் அணிந்திருந்த எங்கள் காவி உடைக்கு தந்த மரியாதை என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

தேசிய ஒற்றுமைக்கான சர்வமத மக்கள் ஒன்றியம் மற்றும் இந்து பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் குறுந்தூர் மலை விவகாரம் தொடர்பான ஊடக சந்திப்பானது வவுனியா ஸ்ரீ போதி தக்சனாராமய விகாரையில் திங்கட்கிழமை (21) இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இச்சந்திப்பின் மேலும் கருத்து தெரிவித்த மத தலைவர்கள்,

குருந்தூர் மலை விடயமானது தொல்பொருள் திணைக்களத்திற்குரியது, இதனை தனி ஒரு மதம் மட்டும் தனக்கானது என உரிமை கொண்டாட கூடாது. சிங்கள பெளத்தர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பது முரணானது, ஆனால் இங்கு தமிழ் பெளத்தர்கள் இப்பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்பதுவே உண்மை.

தெற்கில் சம்பந்தமே இல்லாமல் சிங்கள பெளத்த கிராமத்திற்குள் கிறிஸ்தவ மதகுருவோ அல்லது சைவ பூசகரோ வந்து தங்கள் தளம் எனகூறி உரிமை கொண்டாடினால் சிங்கள பெளத்தர்கள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது விட்டுத்தான் கொடுப்பார்களா..? 

அவ்வாறிருக்கும் போது தமிழரின் பூர்வீக இடமான குருந்தூர்மலை பகுதியில் பெளத்த துறவி ஒருவர் தினமும் சென்று உரிமை கொண்டாடினால் தமிழர்கள் மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வாறு சாத்தியப்படும்.

வணக்க ஸ்தலங்கள்  எல்லா மதத்தவருக்கும் எல்லா இனத்தவருக்கும் உரியது சிங்கள பெளத்தம் என்றில்லாமல் நாங்கள் இலங்கையர்கள் யாரும் வணங்கலாம் என்ற பொதுநிலைக்கு நாங்கள் சிந்திக்க வேண்டும்

மேலும் ஒரு சிலர் இவ்விடயத்தினை அரசியலாக்கி இனங்களுக்கிடையிலான முறுகலினை ஏற்படுத்துவதற்கு முயல்கின்றனர். இவ்வாறான தொல்பொருள் பகுதிக்கான இடத்தின் முழுப்பொறுப்பினையும் தொல்பொருள் திணைக்களம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் இதில் வேறு எந்த மதத்தவரும் தலையிடக்கூடாது என்று தெரிவித்திருந்தனர்.

இச் சந்திப்பில்  வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமசாரநாயக்க தேரர், நாகதீப ரஜமகா விகாரை விகாராதிபதி பூஜ்ய தவத கல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர், மடுக்கந்தை விகாராதிபதி மூவ அட்டகம ஆனந்த தேரர், 

உலுக்குளம் விகாராதிபதி பெரிய உலுக்குளம சுமணதிஸ்ஸ தேரர், தவ்ஜீத் ஜும்மா பள்ளிவாசல் மெளலவி சதுர்தீன் மெளலவி, ஓமந்தை பங்கு தந்தை ஜெஸ்லீ ஜெகநாதன்,கணேசபுரம் கருமாரி நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு பிரமசிறி பூ. முகுந்தன்சர்மா ஆகியோரும் கலந்துகொண்டன்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு