கிரிக்கெட்டிலும் சிவப்பு அட்டை அறிமுகம்

ஆசிரியர் - Editor II
கிரிக்கெட்டிலும் சிவப்பு அட்டை அறிமுகம்

இந்தப் பருவத்திற்கான கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்) ரி-20 தொடரில் மந்த கதியில் வீசப்படும் பந்துப் பரிமாற்றங்களுக்கு எதிராக புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் விதிமுறைகளில் கால்பந்து போட்டிகளில் சிவப்பு அட்டை வழங்கப்பட்டு வீரர் ஒருவர் வெளியேற்றப்படுவது போன்ற விதிமுறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீசும் அணியொன்று தண்டனை பெறும் விதமாக மைதானத்தில் இருந்து களத்தடுப்பாளர் ஒருவரினை வெளியேற்றுகின்ற நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்) தொடரின் 11 ஆவது பருவத்திற்கான போட்டிகள் இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பமாகின்றன. இப் போட்டிகளிலேயே புதிதாக அறிமுகப்படுத்தப்படும் விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படவிருக்கின்றது. அத்துடன் சி.பி.எல் தொடரின் மகளிர் போட்டிகளிலும் இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவிருக்கின்றன.

இதில் கால்பந்து போட்டிகளை ஒத்த சிவப்பு அட்டை விதிமுறை மூலம் அணியொன்று வழங்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஆவது பந்துப் பரிமாற்றத்தை வீசத் தவறும் போது தமது பந்துவீசும் அணியில் இருந்து வீரர் ஒருவரினை மைதானத்தினை விட்டு வெளியேற்ற வேண்டும். வெளியேற்றப்படும் வீரர் யார் என்பதனை அணித்தலைவர் தீர்மானிக்க முடியும்.

அதேநேரம் போட்டியின் 18 ஆவது பந்துப் பரிமாற்றம் ஆரம்பிக்கப்பட முன் நேர தாமதம் ஏற்படும் சந்தர்ப்பம் ஒன்றில் வழமையான விதிமுறைகளை தவிர்த்து உள்வட்டத்திற்குள் (Fielding Circle) ஒரு வீரர் செல்ல வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. இதேநேரம் 19 ஆவது பந்துப் பரிமாற்றம் வீச ஆரம்பிக்கப்பட முன்னர் நேர தாமதம் ஏற்பட்டிருக்கும் எனில் இரு வீரர்கள் களத்தடுப்பு உள்வட்டத்திற்கு செல்ல வேண்டும்.

மறுமுனையில் துடுப்பாட்டத்தின் போது நேர விரயம் மேற்கொள்ளும் அணிகளுக்கும் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு அதனை பின்பற்றாது இருக்கும்  சந்தர்ப்பத்தில் துடுப்பாடும் அணிக்கு ஒவ்வொரு தடவையும் 5 ஓட்டங்கள் அபராதமாக வழங்கப்பட்டு அது அணி பெற்ற மொத்த ஓட்டங்களில் இருந்து நீக்கப்படும்.

இன்னும் சி.பி.எல் ரி-20 தொடரின் பந்துப் பரிமாற்றங்களின் நேரம் போட்டியின் மூன்றாம் நடுவர் வாயிலாக கணக்கிடப்பட்டு அது மைதான நடுவர்களுக்கு அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. 

அதன்படி போட்டியின் 17 பந்துப் பரிமாற்றங்கள் வீசப்பட வேண்டிய நேரமாக 72 நிமிடங்கள் 15 செக்கன்கள் கணக்கிடப்பட்டிருப்பதோடு, 18 ஆவது பந்துப் பரிமாற்றம் 76 ஆவது நிமிடத்திற்கு முன்னர் வீசப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேவேளை 19 ஆவது பந்துப் பரிமாற்றம் 80 நிமிடங்கள் மற்றும் 45 செக்கன்களிலும், 20 பந்துப் பரிமாற்றம் 85 நிமிடங்களுக்குள் உள்ளும் நிறைவு செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு