SuperTopAds

பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் ரணில் பேச்சுவார்த்தை!

ஆசிரியர் - Editor IV
பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் ரணில் பேச்சுவார்த்தை!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். டெல்லியில் அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை நேற்று ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார். டெல்லியில் நடந்த இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.     

இந்த நிகழ்ச்சியின்போது இலங்கையில் யு.பி.ஐ. கட்டண முறையை அறிமுகப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. தோளோடு தோள் நின்றோம் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:- இந்த ஆண்டு, இந்தியா-இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறோம். மேலும், இந்திய வம்சாவளி தமிழ் சமூகம் இலங்கைக்கு வந்து 200 ஆண்டு கள் நிறைவடைகிறது. இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது ஒரு நெருங்கிய நண்பனாக இந்தியா, அந்த நாட்டு மக்களுடன் தோளோடு தோள் நின்று உதவியது.

இலங்கையில் யு.பி.ஐ. கட்டண முறையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவது இரு தரப்புக்கும் இடையே பின்டெக் இணைப்பை ஏற்படுத்தும். பொருளாதார ஒத்துழைப்பு இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் வளர்ச்சி ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. ஒருவருக்கொருவர் பாதுகாப்பு நலன்கள் மற்றும் சிக்கலான தன்மைகளை மனதில் கொண்டு ஒன்றாக செயல்படுவது அவசியம்.

இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை கணிசமாக விரிவுபடுத்தும் லட்சிய தொலைநோக்கு ஆவணத்தை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டு உள்ளன. சுற்றுலா, மின்சாரம், வர்த்தகம், உயர்கல்வி, திறன் மேம்பாடு மற்றும் இணைப்பு ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே இதன் நோக்கம் ஆகும். இதைப்போல பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு மரியாதை இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்கம் குறித்தும் பேசினோம்.

அப்போது அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை குறித்து விக்ரமசிங்கே பேசினார். அந்தவகையில் இலங்கை தமிழர்களின் விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றி சமத்துவம், நீதி மற்றும் சமாதானத்திற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என நம்புகிறோம். இலங்கை தமிழர்களுக்கு மரியாதை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதுடன், 13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன். இருநாடுகள் இடையே தரைப்பாலம் இலங்கை தமிழர்களுக்காக ரூ.75 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா பங்களிக்கும். இந்தியா-இலங்கை இடையே பெட்ரோலிய குழாய் இணைப்புக்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு நடத்தப்படும். அத்துடன் இருநாடுகள் இடையே தரைப்பாலம் அமைப்பது குறித்த சாத்தியக்கூறு பற்றியும் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. படகு போக்குவரத்து இதைப்போல தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன் துறை இடையே பயணிகள் படகு போக்குவரத்து தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.

மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றன. இந்த விவகாரத்தை மனிதாபிமான அணுகுமுறையுடன் கையாள வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். அண்டை நாடுகளுக்கு பயன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறும்போது, 'இந்தியாவின் வளர்ச்சி அண்டை நாடுகளுக்கும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் பயனுள்ளதாக இருக்கும்' என நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு் பொருளாதாரம், சமூக மற்றும் அரசியல் அடிப்படையில் இலங்கை சந்தித்த அசாதாரண சவால்கள் மற்றும் அவற்றை முறியடிப்பதற்கு எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கியதாகவும் அவர் கூறினார். முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் ரணில் விக்ரமசிங்கே சந்தித்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.