ஜீப் வண்டியின் சாரதி உறக்கம்! பேருந்துக்காக காத்திருந்த பாடசாலை மாணவி பலி..
பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துக்காக காத்திருந்த பாடசாலை மாணவி ஒருவர் மீது ஜீப் மோதியதில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று காலை குருநாகல் உஹுமிய, டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
விபத்தில் குறித்த பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சித்துமினி ராஜகுரு என்ற 17 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனியார் வகுப்பில் கலந்துகொள்வதற்காக குருநாகலுக்கு செல்வதற்காக பேருந்திற்காக காத்திருந்தபோதே குறித்த மாணவி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
வீதியில் பயணித்த ஜீப் ஒன்று, சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல், வீதியை விட்டு விலகி, மாணவி மீது பாய்ந்து, தொலைபேசி கம்பத்தில் மோதி நின்றது. சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.