அரசின் சத்துணவு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை சுருட்டிய அதிபர்! யாழ்.மண்டைதீவில் உள்ள பாடசாலை ஒன்றில் சம்பவம்...
யாழ்.மண்டைதீவு மகாவித்தியால மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சத்துணவு திட்ட நிதியை பாடசாலையின் அதிபர் மோசடியான வழியில் கையகப்படுத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் மதியநேர சத்துணவுத் திட்ட நிதியை இன்னொருவரின் பெயரில் காசோலை எழுதி பாடசாலையின் அதிபர் கையகப்படுத்தியுள்ளார்.
பாடசாலைக்கு வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் நிதியில் மதியநேர உணவை வழங்கிவிட்டு அதனை அரசாங்கத்தின் நிதியில் வழங்கியதாகக் கணக்கு காட்டி சுமார் 3 இலட்சம் ரூபா நிதியை கையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமாமகேஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த சம்பவம் தொடர்பில் உறுதிப்படுத்தியதுடன் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் குறித்த அதிபரை விசாரணை முடியும் வரை தற்காலிகப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.