பொலிஸ் பரிசோதகருக்கு இலஞ்சம் -இருவர் கைது-ஏறாவூர் பகுதியில் சம்பவம்

ஆசிரியர் - Editor III
பொலிஸ் பரிசோதகருக்கு இலஞ்சம் -இருவர் கைது-ஏறாவூர் பகுதியில் சம்பவம்

இலஞ்சம் கொடுத்து பொலிஸ் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு அடிப்படையில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் புதன்கிழமை(25) மாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளும்  நடைபெற்று வருகின்றது.

கடந்த 21.04.2023அன்று  ஏறாவூர் பொலிஸ் நிலைய  பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  வை. விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினருக்கு   தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

அதாவது மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கின்ற புகையிரதம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை பகுதியில் தரித்து நிற்பதாகவும் குறித்த புகையிரதம் பயணிக்கின்ற தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்து கொண்டிருப்பதாக  தகவல் கிடைத்ததன் பிரகாரம்   சம்பவ இடத்திற்கு அக்குழுவினர் சென்றிருந்தனர்.

குறித்த சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் குழு ஏற்கனவே வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த இளைஞர் குழுவினருக்கும் ஐயங்கேணி பகுதி சேர்ந்த  இளைஞர் குழுவிற்கும் முன்விரோத மோதலின்  தொடர்ச்சியாக இச்சம்பவம் இடம்பெற்றுளள்தாகவும் ஐயங்கேணி பகுதியில் இருந்து வாள் கத்தி உள்ளிட்ட  ஆயுதங்களுடன் வந்த குழுவினர் வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த இளைஞர் குழுவினருடன்   தாக்குதலின் ஈடுபட்ட நிலையில்   இரு தரப்பினரிலும் சிலர் காயமடைந்திருந்தனர்.

இத்தாக்குதலின் போது ஐயங்கேணி பகுதியில் இருந்து வந்தாறுமூலை பகுதிக்கு தாக்குதலுக்காக வருகை தந்த குழுவினர்  தப்பி சென்ற நிலையில் அவர்கள் வருகை தந்த  மோட்டார் சைக்கிள் ஒன்று  கைவிடப்பட்டிருந்தது.  குறித்த கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள் வந்தாறுமூலை பகுதி இளைஞர் குழுவினால்   புகையிரத தண்டவாளத்தில் வைத்து எரிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில்  மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான்னவின் கட்டளைக்கமைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்தவின் ஆலோசனைக்கமைய ஏறாவூர் பொலிஸ் நிலைய  பதில் பொறுப்பதிகாரி  பொலிஸ் பரிசோதகர்  வை. விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு மோட்டார் சைக்கிளை தீ வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 3 சந்தேக நபர்கள் உட்பட  தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரையும்  கைது செய்து  ஏறாவூர் நீதிமன்றத்தில் அன்றைய தினம் ஆஜர் செய்யப்பட்ட  நிலையில்  தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வந்திருந்த பொலிஸ் பரிசோதகர்  வை. விஜயராஜாவிற்கு புதன்கிழமை(25) மாலை   குறித்த தாக்குதல் சம்பவத்தில்  ஐயங்கேணி பகுதியில் இருந்து வந்து வாள்வெட்டு  தாக்குதல் மேற்கொண்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்திய கூரிய ஆயுதமும் மீட்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்காக  முன்ஆயத்தங்களை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விடுவிப்பதற்காக அவரது  45 வயது மதிக்கத்தக்க  தாய் மற்றும் 23 வயது மதிக்கத்தக்க மற்றுமொருவரும்  ரூபா 20 ஆயிரம் பணத்தை  பொலிஸ் பரிசோதகர்  வை. விஜயராஜாவிற்கு  இலஞ்சமாக வழங்கி  கடமைக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்விருவரும்  கைது செய்யப்பட்டதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை  மேற்கொணடு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு