50 லட்சம் எங்கே? சீ.சி.ரீ.வி கமரா பதிவுகளை கைப்பற்றிய பொலிஸார், துருவித்.. துருவி.. விசாரணை...
இலங்கை மத்திய வங்கியின் வெளியீட்டு பெட்டகத்திலிருந்த 50 லட்சம் ரூபாய் பணம் காணாமல்போனமை தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இதன் முதற்கட்டமாக சுமார் 15 போிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ள பொலிஸார், சீ.சி.ரீ.வி கமரா பதிவுகளை கைப்பற்றியிருக்கின்றனர்.
50 இலட்சம் ரூபா பணக் கட்டு ஒன்று காணாமல் போயுள்ளதாக மத்திய வங்கியின் நிதி திணைக்கள அத்தியட்சகர் ஏ.ஆர். தயானந்தா நேற்று (11) முறைப்பாடு செய்தார்.
மத்திய வங்கி கட்டிடத்தின் அதியுயர் பாதுகாப்பு பகுதியில் புதிய தொழில்நுட்ப பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள மூன்றாவது மாடியில் உள்ள அலமாரியில் இருந்து இந்த பணக் கட்டு மாயமாகியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் வைக்கப்பட்டிருந்த அலமாரியில் ஆயிரம், 5000 ரூபாய் நாணயத் தாள் 8,000 பணக் கட்டுக்கள் இருந்துள்ள நிலையில் சம்பவத்தன்று,
வங்கியில் இருந்து சுமார் 25 ஆயிரம் பில்லியன் ரூபாய் வௌிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பணக் கட்டு தவறுதலாக வேறு அலமாரிக்கு சென்றுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும்,
எனினும் குற்றம் நடந்துள்ளது என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.