கருக்கலைப்பு செய்த மனைவி!! -பெருந்தொகை இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்த கணவன்-
அமெரிக்கா நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் நபர் ஒருவர் தமது முன்னாள் மனைவிக்கு கருக்கலைப்பு செய்துகொள்ள உதவிய 3 பெண்கள் மீது பெருந்தொகை இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த மார்கஸ் சில்வா என்பவரே, கால்வெஸ்டன் பகுதி நீதிமன்றத்தில் குறித்த வழக்கை பதிவு செய்துள்ளார். அதில், டெக்சாஸ் மாகாண சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக செய்துகொள்ளும் கருக்கலைப்பு என்பது கொலைக்கு சமம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமது முன்னாள் மனைவிக்கு கருக்கலைப்புக்கு உதவியதாக தெரிவித்து 3 பெண்கள் மீதும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்கள் 3 பேருமே, தமது முன்னாள் மனைவியை கருக்கலைப்புக்கு ஒப்புக்கொள்ள வைத்ததாகவும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் மனைவிக்கு எதிராக
சில்வா தமது மனைவியை 2022 பெப்ரவரி மாதம் விவாகரத்து செய்துள்ளார். இவர்களின் இரண்டு பிள்ளைகளும் தற்போது தாயாருடனே உள்ளனர். ஆனால் கருக்கலைப்பு விவகாரத்தில் சில்வா தமது முன்னாள் மனைவிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எதையும் முன்னெடுக்கவில்லை.
ஆனால், இவருக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை தந்துதவிய பெண் உட்பட மூவர் மீது அவர் ஒரு மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு பதிந்துள்ளார். மட்டுமின்றி, தமது முன்னாள் மனைவிக்கும் அந்த பெண்கள் மூவருக்கும் இடையே நடந்த குறுந்தகவல் விவாதங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார்.