துருக்கியில் மீட்பு பணிகள் நிறைவு!! -பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்ததாக அறிவிப்பு-
துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நிறைவு பெற்யுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. இந்த நிலநடுக்கம் துருக்கி மட்டும் இன்றி அண்டை நாடான சிரியா வரை நீண்டது.
துருக்கியில் நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,642 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சிரியாவில் பலி எண்ணிக்கை 5,800 ஐ கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நிலநடுக்கத்துக்கு பின்னர் சுமார் 2 வார காலமாக தீவிர மீட்பு பணிகள் நடந்து வந்த துருக்கியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் மீட்பு பணிகள் நிறைவடைந்தன.
இது குறித்து துருக்கி பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையத்தின் தலைவர் யூனுஸ் சேசர் தெரிவிக்கையில்:-
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணி பெரும்பாலான மாகாணங்களில் முடிவடைந்துள்ளது. நாளை இரவுக்குள் (நேற்று) தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முழுவதுமாக முடித்துவிடுவோம் என நம்புகிறோம். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 4,30,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றார்.