SuperTopAds

துருக்கி – சிரியா பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பீபா ஒரு மில்லியன் டொலர் நிதி உதவி

ஆசிரியர் - Editor II
துருக்கி – சிரியா பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பீபா ஒரு மில்லியன் டொலர் நிதி உதவி

துருக்கி – சிரியா நாடுகளில் ஏற்ப்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளன (பீபா) அறக்கட்டளை ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப்படி 366,792,100 ரூபா) நிதி உதவியாக வழங்கவுள்ளது.

இரு நாடுகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் பீபா ஒன்றிணைகிறது என்ற கருப்பொருளில் வழங்கப்படும் இந்த நிதி, இரு நாடுகளிலும் உடனடி மனிதாபிமான உதவிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

குறித்த இரு நாடுகளிலும் அண்மையில் இடம்பெற்ற பூகம்பத்தினால் 42,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன் கடுங்குளிருக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்துவருகின்றனர்.

சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற ஸ்தாபனங்களுடன் இணைந்து துருக்கி கால்பந்தாட்ட சங்கம், சிரியா கால்பந்தாட்ட சங்கம் ஆகியவற்றுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னர் இந்த நிதி உதவி அளிக்கப்படுகிறது.

இந்த நிதியைக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களும் மனிதாபிமான உதவிகளும் வழங்கப்படும். அத்துடன் அவசர மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகள், பாதுகாப்பு என்பனவும் வழங்கப்படவுள்ளது.

இரு நாடுகளினதும் காலபந்தாட்ட சங்கங்களுடன் இணைந்து அங்குள்ள நிலைமைகளை பீபா தொடர்ச்சியாக அவதானித்து மேலதிக நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.