SuperTopAds

“வைக்கோல் பட்டறை நாய்..” தானாக வெளியேறிய உறுப்பினரை வெளியேற்றியதாக கூறிப்பிட்டு, ஒருமாத கொடுப்பனவும் இரத்து...

ஆசிரியர் - Editor I
“வைக்கோல் பட்டறை நாய்..” தானாக வெளியேறிய உறுப்பினரை வெளியேற்றியதாக கூறிப்பிட்டு, ஒருமாத கொடுப்பனவும் இரத்து...

யாழ்.மாநகரசபையில் அநாகரிகமான சொற் பிரயோகங்களை பயன்படுத்திய உறுப்பினர் ஒருவர் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், இந்த மாதத்திற்கான கொடுப்பனவும் நிறுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

யாழ்.மாநகர சபையின் அமர்வு இன்று காலை மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது.இதன்போது மாநகர சபை உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பத்மமுரளி “வைக்கோல் பட்டறை நாய்” போன்று சிலர் செயல்படுவதாக கூறியிருந்தார்.

இதனால் சபையில் அமளிது துமளி ஏற்பட்டது. அதாவது குறித்த உறுப்பினர் சபை அமர்வில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என உறுப்பினர்கள் முதல்வரிடம் கேட்டுக்கொண்டனர். 

நீங்கள் என்னை வெளியேற்ற வேண்டாம் நானே வெளியேறி செல்லுகிறேன் என உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பத்மமுரளி தெரிவித்துவிட்டு வெளியேறினார்.

குறித்த உறுப்பினருடைய அநாகரிகமான சொற்பிரயோகம் பதிவு செய்யப்படும் எனவும், சபையினுடைய வேண்டுகோளுக்கு அமைவாக அவர் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்ற பதிவு குறிப்பிடப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த உறுப்பினருக்கு இந்த மாதத்துக்கான கொடுப்பனவும் ரத்து செய்யப்படுகிறது எனவும், இந்த ஒரு மாதத்தில் சபையினுடைய செயற்பாடுகளுக்கு அவர் அனுமதிக்கப்பட மாட்டார் எனவும் சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.