ஜனாதிபதியின் உத்தரவையும் கண்டு கொள்ளாத முல்லைத்தீவு மாவட்ட செயலகம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியின் உத்தரவையும் கண்டு கொள்ளாத முல்லைத்தீவு மாவட்ட செயலகம்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமுள்ள நிலங்களில் உடன் விடுவிக்கப்படக்கூடிய நிலங்கள்  தொடர்பிலும் அதன் சரியான அளவுகள் தொடர்பிலும் ஆராயும் நோக்கில்  விசேட கூட்டத்தினைக் கூட்டி ஆராய்ந்து அறிக்கையிடுமாறு ஜனாதிபதியின் செயலாளர் பணித்திருந்த நிலையில் 2 மாத காலமாக குறித்த கலந்துரையாடல் இடம்பெறவில்லை என கவலை  தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு  மாகாணத்தில் படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பில் சகல மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து ஜனாதிபதியின் செயலாளர் தலமையில் விசேட சந்திப்பொன்று கடந்த ஏப்பிரல் 17ம் திகதி  ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதில் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட மாவட்டச் செயலாளர்கள் படைத் தளபதிகள் , வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர்கள் , வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் , மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஆகியோர்  கலந்துகொண்ட குறித்த சந்திப்பில் படையினரால் இதுவரை விடுவிக்கப்பட்ட நிலப்பரப்புக்கள் தற்போதும் படைவசமுள்ள நிலங்கள் இதில் படையினரால் விடுவிப்பதாக இணக்கம் கானப்பட்ட நிலங்கள் தொடர்பில் மாவட்ட ரீதியில் கவனம் செலுத்தப்பட்டது.

இருப்பினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களிற்குச் சொந்தமான  1150 ஏக்கர் நிலம் மட்டுமே படையினர் வசம் உள்ளதாக படைத்தரப்பு சுட்டிக்காட்டியிருந்த நிலையில் தமது தகவலின் பிரகாரமும் மக்களின் கூற்றுப்படியும் குறித்த அளவானது மிகத் தவறானதாக உள்ளது என மாவட்டச் செயலாளர்   மற்றும் மாகண பிரதம செயலாளர் ஆகியோர் சுட்டிக்காட்டியிருந்தனர். 

இதன் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமுள்ள நிலங்கள் , அவற்றில் உடனடியாக விடுவிக்கப்படக் கூடியவை அத்தோடு படையினர் உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் எவராவது அவ் நிலத்தை படையினருக்கு கையளிக்க இணங்குகின்றனரா என்பவை தொடர்பில் மாவட்டத்திற்கு நேரடியாகச் சென்று மாவட்டச் செயலாளர் தலமையில் முப்படையினர் சகிதம் ஓர் விசேட சந்திப்பில் சரியான அளவை இனம்கானுமாறு கூறப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் முப்படையினர் நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் பி்தேச செயலாளர்களை உள்ளடக்கிய விசேட கூட்டம் இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் குறித்த கலந்துரையாடல் இன்று வரை இடம்பெறாது இரண்டு மாத காலம் கடந்துவிட்டது.

மீள் குடியேற்றம் இடம்பெற்ற காலம் முதல் மிக முக்கிய பிரஞ்சணையாக கானப்பட்ட இவ் விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி செயலகம் ஒழுங்கமைத்துக் கொடுக்கப்பட்ட நிலையிலும் மாவட்ட நிர்வாகம் இது தொடர்பில் போதிய கவனம் கொள்ளாது இருப்பது கவலையளிப்பதாக மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு