கஷ்ட பிரதேச பாடசாலைகளில் நிரந்தரமாக பணியாற்றும் ஆசிாியா்களுக்கான விண்ணப்பம் கோரல்..
வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட கல்வி வலயங்களில் உள்ள கடல் கடந்த தீவுகள் மற்றும் வவுனியா வடக்கு , மடுக் கல்வி வலயங்களில் குறித்த பாடசாலைகளில் மட்டுமே பணிபுரியும் வண்ணம் விண்ணப்பங்கள் கோருவதற்கு விசேட ஏற்பாடுகள் இடம்பெறுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சில் நிலவும் இடர்பாடுகள் தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக மத்திய கல்வி அமைச்சின் செயலாளார் ஹெட்டியாராச்சி கடந்த 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் வருகை தந்திருந்தார். இதன்போதே குறித்த விடயம் தொடர்பிலும் மாகாண கல்வி அமைச்சின் சார்பில் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்புல் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கு மாகாணத்தில் உள்ள மிகவும் பின் தங்கிய பிரதேசங்களில் ஆசிரியர்களை பணிக்கு அமர்த்துவதில் பெரும் இடர் கானப்படுகின்றது. அதே நேரம் அப் பகுதியில் பெருமளவு மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அல்லது ஆசிரியர்கள் இன்மை காரணமாகவே வேறு இடத்தினை நாடுகின்றனர். இதனால் சில இடங்களில் அயலில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலைத் திட்டம் கேள்விக்கு உள்ளாகின்றது.
இவற்றின் அடிப்படையிலும் மாணவர்களின் கல்வி பாதிப்படையாமல் இருப்பதனை உறுதி செய்வதற்காக மாற்றுத் திட்டம் தொடர்பில் நீண்டகாலமாக ஆராயப்பட்டது. இவ்வாறு ஆராயப்பட்ட விடயத்தில் கானப்பட்ட தீர்வினையே தற்போது கல்வி அமைச்சின் செயலாளரிடம் போரிக்கையாக முன்வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவு , அனலைதீவு , எழுவைதீவு , நைனாதீவு ஆகிய தீவுகளிற்கும் . வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் நெடுங்கேணி , பழம்பாசி , நைனாமடு , குளவிசுட்டான் போன்ற பிரதேச பாடசாலைகள் அதேபோன்று மடுக் கல்வி வலயத்தின் சில பாடசாலைகளும் முல்லைத்தீவின் சில பாடசாலைகளையும் இந்த விசேட திட்டத்தில் உள்வாங்க சிபார்சு செய்யப்படும்.
இத் திட்டத்தின் அடிப்படையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் , யுவதிகளிடம் மட்டுமே விண்ணப்பம் கோரப்பட்டு நேர்முகத் தேர்வின்போது சேவைக்காலம் முழுமையாக அந்தப் பிரதேசங்களில் பணியாற்றச் சம்மதம் தெரிவித்தால் மட்டும் அவர்களிற்கான ஆசிரயர் பயிற்சிக் கலாசாலை பயிற்சியின் பின்னர் ஆசிரியர் சேவையில் உள்வாங்கும் ஓரு விசேட திட்டத்தினை சமர்ப்பித்தோம்.
இதனை கொள்கையளவில் செயலாளரும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதேநேரம் உயர்தரத்துடன் விண்ணப்பம் கோருவதற்கும் விசேட ஏற்பாடும் உள் வாங்கப்படுவதனால் அதனை மத்திய கல்வி அமைச்சே மேற்கொள்ள வேண்டும் . இதன் காரணமாக குறித்த விடயத்தினை உடன் ஆராய்ந்து அதற்கான ஏன்பாடுகளை மேற்கொள்ள ஆவண செய்வதாகப் பதிலளித்துச் சென்றுள்ளார் என்றார்.