ஜே.சி.பி வாகனம் மூலம் தோ் இழுக்கப்பட்ட ஆலயத்தின் நடைமுறைகளை திருத்த ஜீலை 31ம் திகதிவரை காலக்கெடு வழங்கிய சிவசேனை..
வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய தேர்த்திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது. அதன் போது சமூக வேறுபாடு காரணமாக தேரினை இழுப்பதற்கு JCB வாகனம் பயன்படுத்தப்பட்டு தேர் இழுக்கப்பட்டது.
தேரினை JCB மூலம் இழுக்கப்பட்டமை தொடர்பிலான ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து , ஆலய நிர்வாகத்திற்கு எதிராக கடுமையான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.
அதனை அடுத்து ஆலய அறங்காவல் சபையினர் என தம்மை அடையாளபடுத்தியவர்கள், " ஆலய வீதியில் மணல் காணப்பட்டமையால் தேர் புதைந்தது எனவும் , அதனால் தான் தாம் JCB மூலம் தேரினை இழுத்தோம்." என விளக்கம் கொடுத்திருந்தார்கள்.
இந்நிலையில் ஊரவர்கள் சிலர் ஒன்றிணைந்து சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தலைமையில் ஆலய வீதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை கூடி கலந்துரையாடல் ஒன்றினை நடத்தி இருந்தனர்.
குறித்த கலந்துரையாடலில் போது இதுவரை காலமும் ஆலயத்திற்கு அறங்காவலர் சபை என உத்தியோகபூர்வமாக இல்லை என தெரிவித்தனர்.
கலந்துரையாடலின் முடிவில் புதிய அறங்காவலர் சபையை கூட்ட வேண்டும் என பிரதேச செயலரிடம் கோரிக்கையை முன்வைக்கப்பட்டு உள்ளது. அதனை விரைந்து நடவடிக்கை எடுக்க வைக்கும் முகமாக உறுப்புரிமை விண்ணப்பங்களை பிரதேச செயலரிடம் கையளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தம் தெரிவிக்கையில் ,
ஆலயத்தின் வழிபாட்டு ஒழுங்குகள் தொடர்பாக எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலர் வாக்களித்ததன் பிரகாரம் அறங்காவலர் சபையை கூட்டி கோயில் நடைமுறையில் திருத்தமான நடைமுறைகளை கொண்டு வராவிடின் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி போராட தீர்மானித்துள்ளார்கள். என தெரிவித்தார்.