யாழ்.வலி,வடக்கில் விடுவிக்கப்படவுள்ள காணி பொதுமக்களின் குடியிருப்பு காணியா? மேய்ச்சல் நிலமா?
யாழ்.வலி,வடக்கு - பலாலி வடக்கில் 108 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ள நிலையில் மேற்படி காணி குடியிருப்பு காணி அல்ல எனவும், அது மேய்ச்சல் நிலம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்னர் சுமார் 108 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வலி,வடக்கு மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு தனியார் காணிகள் விடுவிக்கப்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது.
ஏற்கனவே பொலிகண்டி பகுதியில் அமைந்திருந்த மீள்குடியேற்ற முகாமில் இருந்த மக்களை குடியேற்றுவதற்காக பலாலி வடக்கு அண்டனிபுரம் பகுதியில் வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டதோடு மக்களும் குடியமர்த்தப்பட்டனர்.
இவ்வாறு குடியமத்தப்பட்ட காணி பலாலி கிழக்கு மக்களின் மேய்ச்சல் தரவைகளாக காணப்பட்ட நிலையில் குறித்த பகுதிகளை வலுக்கட்டாயமாக சில தமிழ் அரசியல் தலைமைகளின் உறுதிமொழியின் பிரகாரம் மீள் குடியேற்றம் இடம்பெற்றது.
இவ்வாறு மீள் குடியேற்றம் இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த பகுதியில் குடியேற்றப்பட்டவர்கள் அப்பிரதேசங்களை சாராதவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் மீள் குடியேற்றம் இடம்பெற்றது.
பலாலி கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகள் அதிகளவிலான குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலப்பரப்புகளை உள்ளடக்கிய பகுதிகளாக காணப்படும் நிலையில் குறித்த பகுதிகளில் பெரும்பாலானவை பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலே உள்ளது.
தற்போது காணி விடுவிப்பு தொடர்பான அறிவுறுத்தல்கள் வெளியாகிய நிலையில் வலி,வடக்கில் ஏற்கனவே மீள் குடியேற்றம் செய்யப்பட்ட ஆண்டனிபுரம் பகுதியின் ஒரு பகுதி மட்டும் விடுவிக்கப்படவுள்ளதாக அறிய கிடைக்கிறது.