யாழ்.திருநெல்வேலி மக்கள் வங்கியில் அடகுவைக்கப்பட்ட நகைகள் மோசடி செய்யப்பட்ட விவகாரம்! பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலான செய்தி...
யாழ்.திருநெல்வேலி மக்கள் வங்கி கிளையில் அடகு வைக்கப்பட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவில் தீர்வு வழங்கப்படும். என மக்கள் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் ரி.எம்.டபிள்யூ.சூரியகுமார கூறியுள்ளார்.
அடகுவைத்த நகைகளை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் வாடிக்கையாளர்களுடனான சந்திப்பின்போதே மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் ரி.எம்.டபிள்யூ. சூரியகுமார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் வங்கியின் திருநெல்வேலி கிளையில் அடகுவைக்கப்பட்ட ஒரு தொகுதி நகைகளை அங்கு பணியாற்றிய அதிகாரி ஒருவர் கையாடிச் சென்று விட்டார் என்ற காரணத்தினால், கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அடகு வைக்கப்பட்ட தமது நகைகளை மீட்க முடியாத வாடிக்கையாளர்களுக்கும்,
வங்கி அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (27) காலை, 09:30 மணியளவில் கன்னாதிட்டியில் அமைந்துள்ள பிராந்தியத் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் மக்கள் வங்கியின் கிளை வலையமைப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளர் ரி.எம்.டபிள்யூ. சூரியகுமார,
பிராந்திய முகாமையாளர், கே.கோடீஸ்வரன், பிராந்திய சட்ட அதிகாரி திருமதி எஸ்.சுகாஸ் மற்றும் பல்கலைக்கழகக் கிளை முகாமையாளர், திருநெல்வேலி கிளை முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் பேசிய பிரதிப் பொது முகாமையாளர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மக்கள் வங்கிக் கிளை ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம்.
இத்தனை வருடங்களாக பொறுமை காத்த உங்களுக்கான நல்ல செய்தி ஒன்றுடனேயே உங்களைச் சந்திக்கிறோம். மிகவும் துன்ப கரமாக நாங்கள் உணர்கிறோம். வங்கியின் அதிகாரிகள் விட்ட தவறுக்காக உங்களைப் பாதிப்படைய விட்டிருக்கக் கூடாது. சில சட்ட நடைமுறைகளின் காரணமாக உங்களுக்கு உடனடியாகத் தீர்வைத் தர முடியாத நிலையில் இருக்கிறோம்.
ஆனாலும், உங்களுக்கு விரைவாகத் தீர்வைப் பெற்றுத் தருவதற்காக வங்கி சில நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. இதுவரை காலமும் நீதவான் நீதிமன்றத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருந்த வழக்கு இப்போது உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் பெப்ருவரி 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அந்த விசாரணை முடிந்ததும் இயலுமான அளவு விரைவாக வாடிக்கையாளர்களின் நகைகள் விடுவிக்கப்படும், அவ்வாறில்லாமல் தாமதமேற்படுமாயின் வங்கியின் தலைமைக் காரியாலய அதிகாரிகளுடன் பேசி
நகைகளுக்கான இன்றைய சந்தைப் பெறுமதியைப் பெற்றுத்தர முயற்சிப்போம் என்று குறிப்பிட்டார். இதன்போது கலந்து கொண்ட வாடிக்கையாளர்கள் சார்பில், சம்பவம் இடம்பெற்று இத்தனை வருடங்களாக மக்கள் வங்கி அதிகாரிகள் பாராமுகமாகச் செயற்பட்டதுடன், வாடிக்கையாளர்கள் மீது காட்டமாக நடந்து கொண்ட சம்பவங்கள் குறித்தும் தமது கண்டனத்தையும் வெளிப்படுத்தினர்.
அத்துடன் ஒவ்வொருவரும் தத்தமது பிரச்சினைகளை வெளிப்படுத்தினர். கடந்த காலத்தில் இடம்பெற்ற அத்தனை சம்பவங்களுக்கும் வருத்தம் தெரிவித்த வங்கி அதிகாரிகள், தாங்கள் வாடிக்கையாளர்களுக்காகத் தம்மால் இயன்ற நடவடிக்கைகளை எடுப்போம் என்று உறுதியளித்துடன்,
அடகு நகை மோசடியினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 65 வாடிக்கையாளர்களுக்கும் அவர்களது நகைகளை விரைவில் மீளளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிப்பாட்டை எழுத்து மூலம் தருவதாகவும் உறுதியளித்தனர்.இருந்தபோதிலும், வழமைபோல காலங் கடத்தப்படாமல்,
எதிர்வரும் 6 ஆம் திகதி வழக்கு விசாரணைகளின் முன்னேற்றம் பற்றியும், வாடிக்கையாளர்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் எதிர்வரும் 10 ஆம் திகதி வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கேட்டனர். வங்கி அதிகாரிகள் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர்.
இந்த அடகு நகை மோசடி 2012 இல் இடம்பெற்ற போதிலும், இது வரை காலமும் அதிகாரிகள் வாடிக்கையாளர்களுடன் இத்தகைய சந்திப்பு எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.