SuperTopAds

வடமாகாண பிரதம செயலாளரை நீதிமன்றில் ஆஜராகுமாறு மேல்நீதிமன்ற நீதிவான் அ.பிறேமசங்கா் உத்தரவு..

ஆசிரியர் - Editor I
வடமாகாண பிரதம செயலாளரை நீதிமன்றில் ஆஜராகுமாறு மேல்நீதிமன்ற நீதிவான் அ.பிறேமசங்கா் உத்தரவு..

வடமாகாண பிரதம செயலாளரை நாளை வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல்நீதிமன்ற நீதிவான் அன் னலிங்கம் பிறேமசங்கா் இன்று உத்தரவிட்டுள்ளாா். 

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும்  வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்காக வடக்கு மாகாண பிரதம செயலாளரால் விடுக்கப்பட்ட  விண்ணப்பங்கோரலினை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் உறுதிகேள் நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனுவை மீதான விசாரணையின் போதே எதிர் மனுதாரரான பிரதம செயலாளரை மன்றில் முன்னிலையாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது.

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கு தகுதியானவர்களை விண்ணப்பிக்குமாறு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அண்மையில் பத்திரிகை ஊடாக விண்ணப்பங்கோரல் விளம்பரத்தை வெளியிட்டார்.

பதில் அல்லது நிரந்தர கல்விப் பணிப்பாளராக தற்போது கடமையாற்றும் கல்வி வலயத்தில் 3 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்திருக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த நிபந்தனை சேவைப் பிரமாணக் குறிப்புக்கு முரணானதென எனக் குறிப்பிட்டு யாழ்.தீவகம் வலயக் கல்விப் பணிப்பாளர் இளங்கோ, சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப் பேராணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

எதிர் மனுதாரர்களாக முறையே வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

"யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும்  வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கோரலையும் அதனை மேற்கொண்டு செயற்படுத்துவதனையும் இடைநிறுத்திவைக்கும் இடைக்காலத் தடைக் கட்டளை வழங்கவேண்டும்.

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும்  வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணபங்கோரலை விடுத்த முதலாவது எதிர்மனுதாரர் அவரது பொதுக் கடமையை மீறிய இந்த சட்டவிரோத விண்ணப்பங்கோரலை வெற்றும் வறிதானதுமாக உறுதிகேள் எழுத்தாணை கட்டளையை வழங்கவேண்டும்.

வழக்குச் செலவு மற்றும் மன்றால் நியாயமானது எனக் கருதும் பிற நிவாரணங்களும்" என மனுதாரரால் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. 

அத்துடன், மனுதாரரின் முதலாவது நிவாரணமான இடைக்காலத் தடை தொடர்பான மன்றின் கட்டளை  நாளை  வழங்கப்படும் எனக் குறிப்பிட்டு ஒத்திவைக்கப்பட்டது.