SuperTopAds

பிரித்தானிய புகலிடக்கோரிக்கையாளர்கள் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

ஆசிரியர் - Editor II
பிரித்தானிய புகலிடக்கோரிக்கையாளர்கள் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக கடல்வழியாக நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டம் சட்டபூர்வமானதென பிரித்தானிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ருவாண்டாவிற்கு புகலிட கோரிக்கையாளர்களை அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் நோக்கத்துடனேயே உள்ளதாக லண்டனில் உள்ள உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த வாரம் ஆபத்தான பயணத்தில் நான்கு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து நீதிமன்ற இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.

ருவாண்டா கொள்கை சட்டத்தை மீறவில்லை என்றும், 1998 மனித உரிமைகள் சட்டத்துடன் பாராளுமன்றத்தால் விதிக்கப்பட்டவை உட்பட அரசாங்கத்தின் சட்டப்பூர்வ கடமைகளுடன் ஒத்துப்போகின்றது என்றும் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இருப்பினும் ஆரம்பத்தில் ருவாண்டாவுக்கு நாடு கடத்த திட்டமிடப்பட்ட எட்டு பேரின் வழக்குகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் , உள்துறை செயலாளரால் அவர்கள் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, இந்த கொள்கை சட்டபூர்வமானது என்பதை தாங்கள் எப்பொழுதும் வலியுறுத்தி வருவதாகவும், நீதிமன்றம் இதனை உறுதி செய்துள்ளதாகவும் பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்துக்காக இதுவரை 140 மில்லியன் பவுண்ஸ் நிதி ருவாண்டாவிற்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை எந்த ஒரு புகலிடக் கோரிக்கையாளரும் அங்கு அனுப்பப்படாத நிலையில் இன்று இதற்கு நீதிமன்றத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தொண்டு நிறுவனங்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.