SuperTopAds

மாணவன் ஒருவனை தேசியமட்ட போட்டியில் கலந்துகொள்ளவிடாது தடுத்த அதிபர். ஒத்து ஊதிய பிரதி வலய கல்வி பணிப்பாளர்! யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவம்...

ஆசிரியர் - Editor I
மாணவன் ஒருவனை தேசியமட்ட போட்டியில் கலந்துகொள்ளவிடாது தடுத்த அதிபர். ஒத்து ஊதிய பிரதி வலய கல்வி பணிப்பாளர்! யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவம்...

யாழ்.பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவனை தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்க விடாமல் பாடசாலை நிர்வாகம் தடுத்த விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது. 

இந்த விடயம் தொடர்பான முறைப்பாட்டை விசாரிப்பதற்காக பாடசாலைக்கு வருகைதந்த வலிகாமம் பிரதிக்கல்விப் பணிப்பாளர் மதியழகன் குறித்த மாணவனை சுய விருப்பின் பேரில் போட்டியில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதித் தருமாறு வற்புறுத்தியுள்ளார். 

அதனை மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நாடகம் ஒன்று கோட்டம், வலயம், மாவட்டம், மாகாண மட்டங்களில் வெற்றிபெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. 

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) கொழும்பில் போட்டி நடைபெறவுள்ளது. போட்டியில் பங்குபற்றும் மாணவர்களில் சிலர் அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்திருந்தனர். 

அவர்களில் சிலர் பாடத் தெரிவின் அடிப்படையில் மேற்படி பாடசாலையில் இல்லாத பாடங்களை கற்பதற்கு விரும்பியதால் வேறு பாடசாலைகளில் அனுமதி பெற்றிருக்கின்றனர். 

இதேபோன்றே, மேற்படி மாணவனும் ஊடகவியல் பாடத்தைக் கற்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். அந்தப் பாடத்திற்கு பாடசாலையில் ஆசிரியர் இன்மையால் வேறு பாடசாலையில் அனுமதி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

குறித்த மாணவனும் தேசிய மட்டத்திற்கு செல்லும் நாடகக் குழுவில் இடம்பெற்றிருந்ததால் கடந்த வியாழக்கிழமை பாடசாலையில் இடம்பெற்ற ஒத்திகை பார்க்கும் நிகழ்விற்கு சென்றார். 

இதன்போது, அவரை அழைத்த அதிபர் வேறு பாடசாலைக்கு செல்லவிருக்கும் மாணவன் என்பதால் நாடகத்தில் பங்குபற்ற முடியாது எனக் கூறி அவரது விடுகைப் பத்திரத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினார்.

வீட்டிற்கு சென்ற மாணவன் விடயத்தை பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத்து பாடசாலைக்கு சென்ற தாயார் தமது கோரிக்கை இன்றி தனியே மகனிடம் விடுகைப் பத்திரத்தைக் கொடுத்தமை தொடர்பாக தமது ஆட்சேபனையை வெளியிட்டார். 

மேலும் நாடகத்தில் தமது மகன் இடம்பெறாமை குறித்தும் கவலையை வெளியிட்டார். இதன்போது, கொழும்பிற்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு நிதி இல்லை எனவும் தாம் போட்டிக்கு செல்லவில்லை எனவும் அதிபர் தமக்கு தெரிவித்தார் என தாயார் கூறினார்.

எனினும், பின்னர் நாடக ஒத்திகைக்காக மாணவர்களுக்கு அறிவிக்கும் வாட்சப் குழு கலைக்கப்பட்டு குறித்த மாணவன் இணைக்கப்படாமல் புதிய குழு உருவாக்கப்பட்டு நாடக ஆற்றுகைக்கான ஒத்திகை இடம்பெற்றிருக்கின்றது. 

இதை அறிந்த தாம் அதிபரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, அதிபர் என்ற வகையில் தமக்கு முடிவெடுக்கும் அதிகாரம் உண்டெனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் என தாயார் கூறினார்.

மாணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக வலிகாமம் வலய கல்வி அலுவலகம், வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ஆகியவற்றில் பெற்றோர் நேற்று (06) முறைப்பாடு செய்தனர்.

அச்சமயம் வேலைகாம கல்வி பணிப்பாளர் கொழும்பு சென்றதாக தெரிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெற்றோரும் மாணவனும் யாழ்.ஊடக அமையத்திற்கு வருகை தந்து நமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.

குறித்த விடையம் தொடர்பில் கொழும்பில் நின்ற வலிகாம வலய கல்விப் பணிப்பாளருடன் நேரடியாக தொடர்பு ஏற்படுத்திய ஊடகவியலாளர்கள் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தினர்.

கருத்துக்களை செவிமடுத்த வலய கல்விப் பணிப்பாளர் மாணவனை போட்டிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகளை தான் செய்வதாக உறுதியளித்தார்.