தொடர் போராட்டம் எதிரொலி! -ஹிஜாப் கண்காணிப்பு பொலிஸ் பிரிவை கலைத்தது ஈரான் அரசு-
ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டு அரசாங்கம் ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளது.
ஈரானில் ஹிஜாப் மத உடைக் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க 2006 இல் அறநெறிக் பொலிஸ் பிரிவை ஈரான் அரசு ஆரம்பித்து. ரோந்துப் பணியில் ஈடுபடும் இந்தப் பிரிவுக்கு, உடை கட்டுப்பாடுகளை மீறுவோரைக் கைது செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், டெஹ்ரானில் பொது இடத்தில் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று கூறி, மாஸா அமினி (வயது 22) என்ற இளம்பெண்ணை அறநெறி பொலிஸார் கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி கைது செய்து அடித்து கொன்றது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் ஹிஜாப் அணியமறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, போராட்டத்தை ஒடுக்க பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஹிஜாப் தடை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமா என்பது குறித்து நாடாளுமன்றமும், நீதித் துறையும் ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அட்டார்னி ஜெனரல் ஜாபர் மான்டசெரி தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், அறநெறி பொலிஸ் துறையை ஈரான் அரசு ரத்து செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஈரான் அட்டார்னி ஜெனரல் ஜாபர் மான்டசெரி நேற்று முன்தினம் கூறும்போது, 'அறநெறி பொலிஸ் துறைக்கும், நீதித் துறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அந்தப்பிரிவு இப்போது கலைக்கப்பட்டுள்ளது' என்றார்.