யாழ்.மாநகரில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத 6 ஆயிரம் கிலோ பழப்புளியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு 35 நாட்களின் பின் கடும் நிபந்தனையுடன் பிணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத 6 ஆயிரம் கிலோ பழப்புளியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு 35 நாட்களின் பின் கடும் நிபந்தனையுடன் பிணை..

யாழ்.நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் மனித நுகர்வுக்கு ஒவ்வாதது என பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கணிக்கப்பட்ட 6 ஆயிரம் கிலோ பழப்புளியை விற்பனைக்கு தயார் செய்து கொண்டிருந்த நபர் கைது செய்யப்பட்டு 35 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் ஐப்பசி மாதம் 25ம் திகதி, சுகாதார சீர் கேட்டுடன் வண்டுகள் மொய்த்த நிலையில் துர்நாற்றத்துடன் களஞ்சியபடுத்தி வைத்திருந்த 6 ஆயிரம் கிலோ பழப்புளி யாழ்நகர் ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள களஞ்சிய சாலையில் இருந்து கைப்பற்றப்பட்டது. 

அத்துடன் சந்தேகநபரும் பொது சுகாதார பரிசோதகர்களால் கைது செய்யப்பட்டு யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் ஐப்பசி 26ம் திகதி முற்படுத்தப்பட்டார். இதனையடுத்து பழப்புளியின் மாதிரியினை இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்புமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு மன்று உத்தரவிட்டதுடன் 

மீட்கப்பட்ட 6 ஆயிரம் கிலோ பழப்புளியினை அழிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகருக்கு உத்தரவிட்டது. அத்துடன் சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டது. இதனையடுத்து சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

தொடர்ந்து இரண்டு தடவைகள் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதும், சந்தேகநபர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவரால் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டபோதும், சந்தேக நபரிற்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அனுப்பிவைக்கப்பட்ட பழப்புளி மாதிரிகளின் அரச பகுப்பாய்வு திணைக்கள அறிக்கை நேற்றுவரை கிடைக்காத நிலையில் நேற்றைய தினம் 28.11.2022 வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. 

இதன்போது சந்தேகநபர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவரால் மீண்டும் பிணை விண்ணப்பம் முன்வைக்கப்பட்டது. பிணை விண்ணப்பத்திற்கு பொது சுகாதார பரிசோதகர்களால் ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில் சந்தேக நபரிற்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.

1- 100,000/= காசு பிணைப்பணமாக செலுத்த வேண்டும்/ 2- மூவர் சரீர பிணை கையொப்பம் இட வேண்டும்/ 3- மூவரில் ஒருவர் யாழ் நீதவான் நீதிமன்ற எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும்/ 4- ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 9.00am ற்கும் மாலை 3.30pm ற்கும் இடையில் நீதிமன்றில் கையெழுத்து இட வேண்டும்.

என்ற நிபந்தனைகளுடன் “35 நாட்கள்” விளக்கமறியலின் பின்னர் சந்தேக நபரிற்கு, மேற்படி நிபந்தனைகளுடன் பிணை நீதிமன்றால் வழங்கப்பட்டது. வழக்கு எதிர்வரும் 02.02.2023 ம் திகதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு