யாழ்.பல்கலைகழகம் - சீன விவசாய பல்கலைகழகம் இடையே ஒப்பந்தம் வேண்டாம்! மாணவர் ஒன்றியம் வேண்டுகோள், ஒப்பந்ததின் பின்னால் நாசகார திட்டம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டு..
மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேண்டாம் என இலங்கை அரசுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், சீன அரசாங்கத்தினால் சீன விவசாயப் பல்கலைக்கழகத்திற்கும்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கை அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் நவம்பர் 25, கையொப்பமிட இரகசிய ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை ஊடகங்களில் அறிந்து அதிர்ச்சியடைந்தோம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் எங்களின் நிலத்தை அபகரிக்கும் சீனாவின் மறைமுக நிகழ்ச்சி நிரலை அறிந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு துணிச்சலாக மறுத்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம்.
ஐ.நா சபையின் அறிக்கையின் பிரகாரம், இனவழிப்பு யுத்தத்தின் இறுதி ஆறு மாத காலப் பகுதியில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களும் சிறுமிகளும் சிறிலங்கா ஆயுத படையினரால் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். சீனா, அனைத்தையும் நன்றாக அறிந்திருந்தும் தமிழர்களை தொடர்ந்து அவமானப்படுத்துவதையும்,
சர்வதேச அரங்கில் தமிழர்களுக்கு நீதி கிடைக்காமல் தடுப்பதையும் வழக்கமாக கொண்டதுடன், போர்க்குற்றவாளிகளை ஆதரித்தும் இலங்கையை கடன் பொறியில் சிக்க வைத்து அச்சுறுத்தியும் இலங்கையை கைப்பற்றும் அதன் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகிறது.
தமிழர் விரோத மனப்பான்மை கொண்ட சீனா வடக்கிலும் கிழக்கிலும் தனது செல்வாக்கை அதிகரிக்கச் செல்லும் தீய நோக்கத்துடன் எமது கடலையும் நிலத்தையும் அபகரித்து எமது பாரம்பரிய மண்ணில் எம்மை அகதிகளாக்கி இனப்படுகொலை செய்யும் முயற்சிகளை நாம் ஏற்கனவே கண்டித்திருந்தோம்.
தீங்கு விளைவிக்கும் கடலட்டை பண்ணைகள் என்ற போர்வையில் சீனா நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்கனவே எமது கடலின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து, எமது மீனவர்களிடையே பிளவை உருவாக்கியுள்ளது.
தற்போது சீனா வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள வளமான விவசாய நிலங்களை, தமது நாட்டில் பத்து ஆண்டுகளில் ஏற்பட இருக்கும் மிக கடுமையான உணவு பஞ்சத்தை சமாளிக்கும் பொருட்டு தீய எண்ணத்துடன் கைப்பற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
சீனா, இலங்கைக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுடன் கூடிய மலக் கழிவுகளை உரமாக வழங்கியதாகவும், இலங்கைக்கு மில்லியன் கணக்கான ரூபாய்களை செலுத்துமாறு நிர்பந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
சீனாவில் வரவிருக்கும் உணவு நெருக்கடியை சமாளிக்க எமது வளமான விவசாய நிலங்களை சீனா எப்படி கைப்பற்றி எம்மை அடிமையாக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
வெளிப்படைத்தன்மையற்ற மற்றும் சாத்தியமற்ற சீனக் கடன்கள் மூலம் இலங்கை தற்போதைய நிலைமைக்கு வந்துள்ளது என்பது தெளிவாகிறது. இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களுக்கு ஜப்பானும், இந்தியாவும் ஆதரவளித்துள்ள போதிலும், கடன்களை பரிசீலிக்கும் தற்போதைய பேச்சு வார்த்தைகளில் கூட
சீனாவின் மறுநிதியளிப்பு திட்டத்தில் தொடர்ந்து இருந்து வருவது, இலங்கையில் மீண்டும் பேரழிவை ஏற்படுத்தும் சீனாவின் மறைமுக நிகழ்ச்சி நிரல் இலங்கையின் சமீபத்திய வரலாற்றிலிருந்து தெளிவாகக் அறிய முடிகிறது.
சீனாவின் அணுகுமுறையின் அடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வளமான விவசாய நிலங்களையும் கடற்பரப்பையும் சீனாவுக்கு விற்பதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சீனாவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.
எமது நிலங்களையும் கடலையும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவிற்கு விற்க பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் செய்து வருகிறது.யாழ்.பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள்,
அண்மையில் சீன பல்கலைக்கழகத்துடன் கைச்சாத்திட இருந்த ஒப்பந்தத்தை இரத்து செய்த துணை வேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா அவர்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன்,
அரசியல் நிர்ப்பந்தத்திற்காக எமது நிலத்தையும் கடலையும் வேறு நாடுகளுக்கு விற்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதுடன், நமது கடலையும், நிலத்தையும் காப்பாற்ற குரல் கொடுக்குமாறு
சிவில் சமூகங்கள் மற்றும் அனைத்து மக்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த கடமையிலிருந்து தவறுகின்ற பட்சத்தில், எதிர்காலத்தில் நாம் அனைவரும் எம்முடைய சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்படுவோம் என்றுள்ளது.