SuperTopAds

மாவீரர் நாள் நினைவேந்தலை குழப்பும் வகையில் உதைபந்தாட்டப் போட்டி! தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஒருவரே ஏற்பாடாம்..

ஆசிரியர் - Editor I
மாவீரர் நாள் நினைவேந்தலை குழப்பும் வகையில் உதைபந்தாட்டப் போட்டி! தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஒருவரே ஏற்பாடாம்..

மாவீரர் நாள் இன்று வடக்கு- கிழக்குத் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்நிலையில் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் தலைவர் கிண்ணம் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி - 2022  

கால் இறுதிப் போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை- 03.30 மணி முதல் யாழ்.இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் வலிகாம மட்டம் மற்றும் மாவட்ட மட்டத்தில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் இன்றைய போட்டியில் பங்குபற்றும் வீரர்கள் பலரும், தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பலரும் தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் தற்போதைய தலைவராகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வலிகாமம் பகுதி முக்கியஸ்தர் ஒருவர் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் மாவீரரர் வாரத்தின் இறுதிநாளில் இவ்வாறு செயற்படுவது ஏன்? எனப் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுதொடர்பில் தமது கடும் விசனத்தையும் வெளியிட்டுள்ளனர்.

இன்று போட்டிகளை வைக்க வேண்டாம். நாங்கள் துயிலுமில்லங்களுக்குச் செல்ல வேண்டும். காலா காலமாக மாவீரர் வாரத்தின் இறுதி நாளன்று விளையாட்டுப் போட்டிகளோ, கேளிக்கை நிகழ்வுகளோ நடாத்துவதில்லை என உங்களுக்குத் தெரியாதா? 

என இன்றைய கால் இறுதிப் போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த அணி ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் கேட்டதற்கு ‘ அது எல்லாம் தெரியாது போட்டிகள் நடந்தே தீரும்’ என வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் பதிலளித்ததாகவும் நம்பகரமாகத் தெரிய வருகிறது.