பிரச்சினை தலைக்குமேல் சென்றுவிட்ட பின்னரே யாழ்.மாவட்ட கல்விச் சமூகம் கண் விழித்துள்ளது!
போதைப் பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடாத்த பாடசாலைகளை தேடி நாங்கள் சென்றபோதும் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. என சாவ கச்சேரி ஆதார வைத்திய சாலையின் உளநல மருத்துவர் வைத்தியர் திருமதி வினோதா கவலை தெரிவித்தார்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் பாவனை தடுப்பு தொடர்பிலான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ளமையை ஒளிவு மறைவின்றிக் கூறுகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் போதைப் பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது பெரும்பாலான பாடசாலைச் சமூகம் ஒத்துழைப்பு வழங்கவில்லை.
தற்போது பிரச்சனை தலைக்கு மேல் ஏறிவிட்ட நிலையில் பாடசாலை சமூகம் எங்களைத் தேடி வருகின்றார்கள் வரவேற்கிறேன். நான் சுமார் ஒன்பது வருடங்களாக சாவகச்சேரி மருத்துவமனையில் அமைந்துள்ள மதுசாரம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை வழங்கி வருகிறேன்.
சுமார் 250க்கு மேற்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்கள் தாங்களாக முன்வந்து சிகிச்சை பெறுகிறார்கள். ஆகவே போதைப் பொருள் பாவனை தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் காணப்படும் நிலையில் தடுப்பதற்கு சரியான திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.