SuperTopAds

நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் -2 நாள்களுக்கு பின் உயிருடன் மீட்பு-

ஆசிரியர் - Editor II
நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் -2 நாள்களுக்கு பின் உயிருடன் மீட்பு-

இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் 2 நாள்களுக்கு பின்னர் உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். 

மேற்கு ஜாவா மாகாணம், சியாஞ்சூர் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், 50,000ற்க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதில், 271 பேர் பலியான நிலையில், 2,000ற்க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 2 நாள்களாக காணாமல் போன 150 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாக்ரக் என்ற கிராமத்தில் புதன்கிழமை மாலை இடிபாடுகளில் சிக்கியிருந்த சடலத்தை மீட்புப் படையினர் மீட்கும்போது சடலத்திற்கு கீழே அஸ்கா மௌலானா மாலிக் என்ற 6 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

2 நாள்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் அவரது பாட்டியின் சடலத்திற்கு கீழே உயிருடன் இருந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையுடன் மீட்புப் படையினர் மீட்புப் பணியை தொடர்ந்துள்ளனர்.